சையத் முஷ்டாக் அலி டி20 ட்ராபி; தமிழக அணியை வீழ்த்திய ஆர்.சி.பி வீரர்!

0
8496
SMAT

இந்திய உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி இந்தியாவின் 6 நகரங்களில் நடந்து வருகிறது.

இந்திய தேசிய வெள்ளைப் பந்து அணிக்கு இந்தத் தொடரில் இருந்து வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மிகக் குறிப்பாக இந்தியாவில் நடத்தப்படும் டி20 லீக் ஐபிஎல் தொடருக்கு இந்திய வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு களமாக இந்தத் தொடர் அமைந்திருக்கிறது.

- Advertisement -

மொத்தம் முப்பத்தி எட்டு அணிகளை வைத்து 138 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. அணிகள் மற்றும் ஆட்டங்களின் எண்ணிக்கையே இந்தத் தொடர் எவ்வளவு பெரிய தொடர் என்பதை காட்டும்.

ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதில், கடைசிப் பிரிவு இ பிரிவைச்சேர்ந்த தமிழ்நாடு மற்றும் பெங்கால் அணிகள் லக்னோ மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பெங்கால் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதெனத் தீர்மானித்தார்.

பெங்கால் அணியின் துவக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் 38, சுதீப் குமார் 27, ரித்விக் ராய் 32 ஆகியோர் சராசரி ரன் பங்களிப்பைத் தந்து வெளியேற, இறுதிநேரத்தில் களம் புகுந்த ஆர்சிபி வீரர் ஷாபாஸ் அகமத் 27 பந்துகளில் 42 ரன்களை 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்கால் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. தமிழக தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாய் கிஷோர் 4 ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். நடராஜன் மூன்று ஓவர்கள் பந்து வீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய தமிழக அணிக்கு சாய் சுதர்சன் 62 (48) தவிர ஒருவரும் சராசரியான பங்களிப்பை கூட பேட்டிங்கில் தரவில்லை. பெங்கால் அணிக்கு பேட்டிங்கில் அசத்திய ஷாபாஸ் அகமத் பந்துவீச்சிலும் கேப்டன் பாபா அபராஜித், சஞ்சய் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்கால் அணியின் வெற்றியை எளிதாக்கினார். 4 ஓவர்கள் பந்துவீசி அவர் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்கிய ஷாபாஷ் அகமத் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!