அடேங்கப்பா ! வகை வகையான ஷாட்கள் அடித்து சூர்யகுமார் யாதவ் அபார சதம் ! போராடி தோற்றது இந்தியா !

0
107
Suryakumar Yadav

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் பெரிய வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டிக்கு கோவிட் தொற்றால் கேப்டன் ரோகித் சர்மாவால் பங்கேற்க முடியாததால், ஜஸ்ப்ரீட் பும்ரா தலைமை ஏற்று இருந்தார்!

இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி இங்கிலாந்தோடு விளையாடியது. இந்தத் தொடரின் முதல் போட்டி செளதாம்டனில் நடந்தது. இதில் 50 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. பர்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டனில் நடந்த இரண்டாவது ஆட்டத்திலும் 49 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.

இதையடுத்து இன்று இந்தியா இங்கிலாந்து மோதும் தொடரின் இறுதி டி20 போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸில் வென்ற இங்கிலாந்து கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சிப்லி, சால்ட் ஆகியோர் இடம் பெற்றனர். சாம் கரன், மற்றும் ஒரு ஸ்பின்னர் நீக்கப்பட்டனர். இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஸ்ரேயாஷ், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியின் ஓபனர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் ஜேசன் ராய் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டேவிட் மலான் மற்றும் லியாம் லிவிங்ஸ்டனின் ஆட்டத்தில் அனல் பறந்தது. டேவிட் மலான் 39 பந்துகளில் 77 ரன்னும், லிவிங்ஸ்டன் 29 பந்தில் 42 ரன்களும் அடிக்க, இருபது ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களை குவித்தது.

இதற்கடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரிஷாப் பண்ட் 1, விராட் கோலி 11, ரோகித் சர்மா 11 என வெளியேறி அதிர்ச்சி அளித்தார்கள். ஆனால் இதற்கடுத்து ஸ்ரேயாஷ் வர, அவரை வைத்துக்கொண்டு சூர்யகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார். மைதானத்தின் எல்லாத் திசைகளிலும் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாய் தெரித்தது. 32 பந்துகளில் அரைசதம் அடித்தவர் அடுத்த 16 பந்துகளில் சேர்த்து 48 பந்துகளில் சதம் அடித்தார். 11 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடக்கம்.

இலக்கை சேஸ் செய்யும் போது கே.எல். ராகுல் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராகவும், ரோகித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் சதம் அடித்திருக்கிறார்கள். இதற்கு முன்னால் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஆகிய நால்வர் மட்டுமே சதம் அடித்திருந்தனர். சூர்யகுமார் யாதவ் ஐந்தாவது வீரராய் இணைந்திருக்கிறார்.

அடுத்து ஸ்ரேயாஷ் 23 பந்தில் 28 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து தினேஷ் கார்த்திக் ஏழு பந்தில் ஆறு ரன், ஜடேஜா நான்கு பந்தில் ஏழு ரன் என வெளியேற நெருக்கடி அதிகரித்தது. இதையடுத்து விட்டுத்தராது விளையாடிய சூர்யகுமார் யாதவ் மொயீன் அலி வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடித்து இறுதியில் 55 பந்துகளில் 14 பவுண்டரி 6 சிக்ஸரோடு 117 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கடுத்து கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் ஆவேஷ் கானும், ஹர்சல் படேலும் இருந்தனர். ஆனால் இந்த ஜோடியால் இலக்கை அடைய முடியவில்லை. ஹர்சல் படேலும் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி வென்று இருந்ததால் தொடரைக் கைப்பற்றியது.