இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் செய்தியாளர் சந்திப்பின்போது இந்திய டி20 அணியில் சிறந்து விளங்கும் மூன்று வீரர்கள் குறித்து கேட்டதற்கு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வழி விட்டனர். அதற்குப் பிறகு அணியில் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ரியான் பராக் உள்ளிட்ட ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தற்போது இந்திய அணியில் இடம் பெற்று தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.
அதிலும் சூரியகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் இந்திய அணியில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவிடம் டி20 அணியில் சிறந்து விளங்கும் மூன்று வீரர்கள் குறித்து கேட்டதற்கு இது ஒரு வாக்குவாதத்தை ஏற்படுத்தும் எனவும், அதனை தேர்வு செய்வதற்கு கடினம் என சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு வாதத்தை தொடங்கக்கூடிய விஷயமாகும். இது ஒரு மிகப்பெரிய தலைவலி. இதனை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினம். என்னை பொருத்தவரை மூன்று வீரர்களில் இரண்டு பேராக நான் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோரை கூறுவேன். ஆனால் என்னை பொறுத்தவரை மூன்றாவது நபரை தேர்வு செய்ய முடியாது.
இதையும் படிங்க:அபிஷேக் ஷர்மா இந்த சிக்கல்ல மாட்டுவாரு.. அந்த 2 பேர் ரெடியா இருக்காங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து
அபிஷேக் ஷர்மா, ரின்கு சிங், ரியான் பராக், நிதிஷ் ரெட்டி, ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் டி20 ஜாம்பவான்களாக இருக்க பெரிய வாய்ப்பு உள்ளது. மேலும் டி20 கிரிக்கெட் பொறுத்த வரை நாங்கள் 280 முதல் 285 ரன்கள் வரை குவித்து இருக்கிறோம். பேட்ஸ்மேன்கள் தங்களது வேலையை செய்கிறார்கள். அதேபோல பந்துவீச்சாளர்கள் இரண்டு அல்லது மூன்று சிக்சர்களை அடித்தால் 300 ரன்கள் எட்ட முடியும். இது பந்துவீச்சாளர்களுக்கு பேட்டிங் செய்ய வேண்டிய ஒரு சிறு அழுத்தத்தை ஏற்படுத்தும்” என்று கூறியிருக்கிறார்.