சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் ஒரு இந்திய இளம் பேட்ஸ்மேனை வாங்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இன்று அபுதாபியில் 19வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் நிறைய நட்சத்திர வீரர்கள் இல்லையென்றாலும் கூட, சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கையில் அதிக பணம் வைத்திருக்கின்ற காரணத்தினால், ஏலத்தில் எப்படியான மோதல் ஏற்படும் என்பது சுவாரசியமானதாக இருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடரில், மும்பை அணிக்கு வாழ்வா சாவா போட்டியில் சர்ப்ராஸ் கான் 250க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அரை சதம் அடித்து கலக்கினார். அதே போட்டியில் ஜெய்ஷ்வால் சதம் அடித்தார். இதனால் மும்பை அணி வெற்றி பெற்றது.
தற்போது சர்பராஸ் கான் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார். கடந்த மெகா ஏலத்தில் அவருடைய தம்பிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் கிடைத்தது. ஆனால் இவரை எந்த அணியும் வாங்கவில்லை. இந்திய டெஸ்ட் அணியில் ஒரு பெரிய சதத்தை அடித்துவிட்ட பொழுதும் கூட இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.
இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசும்பொழுது ” சர்ப்ராஸ் கான் தற்போது நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். அவரை சிஎஸ்கே வாங்கும் பொழுது ஆறு போட்டிகளில் விளையாட வைத்தால், அதில் இரண்டு போட்டிகளில் அவர் வெற்றி பெற வைத்தால் கூட, அவரை வாங்கியது நியாயமாகிவிடும். சேப்பாக்கம் ஆடுகளம் தொழில்நுட்ப ரீதியாக விளையாடுபவர்களுக்கு சரியாக இருக்கும். மேலும் சிஎஸ்கேவில் இணைந்து வெற்றி பெறுவதற்கு கவனம் செலுத்தினால், அவர் ஃபார்மில் இருப்பதால் சிஎஸ்கே பெரிய பயனடையும்”
இதையும் படிங்க : ஆசஸ் 3வது டெஸ்ட்.. ஆஸி பிளேயிங் XI அறிவிப்பு.. கேப்டன் மாற்றம்.. முக்கியமான 2 மாற்றங்கள்.. தொடரை வெல்லுமா?
“தற்போது இவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். வெங்கடேஷ் ஐயர் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட பொழுது அவர் நல்ல ஃபார்மில் இல்லை என்பதை நாம் பார்த்தோம். ஆனால் இவர் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து வருகிறார். இவரது ஷாட் ரேஞ்ச் மற்றும் அவரிடம் இருக்கும் நம்பிக்கையை பார்த்தால், அந்த மாதிரியான வீரரை எளிதில் வாங்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.