ஐபிஎல் ப்ளே ஆப் சுற்று போட்டிகளில் மழை குறுக்கிட்டால் இந்த விதியை பயன்படுத்தி வெற்றியாளரை தேர்ந்தெடுக்கலாம் – புதிய அறிவிப்பு

0
867
IPL Playoffs 2022

ஐ.பி.எல் கடந்த வாரம் துவங்கியதுபோல் இருக்கிறது, ஆனால் ஏறக்குறைய இரண்டு மாதங்களை நெருங்கி, நடப்பு ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன. 24ஆம் தேதி முதலில் 29வரை ப்ளேஆப்ஸ் சுற்று போட்டிகளும், இறுதி போட்டியும் நடந்து முடிகின்றன.

ஒட்டுமொத்த ஐ.பி.எல் வரலாற்றில் இதுநாள் வரையில் சாம்பியன் அணியும், மும்பை அணியும் ஒருசேர ப்ளேஆப்ஸ் சுற்று வாய்ப்பில்லாமல் தொடரை விட்டு வெளியேறியதில்லை. அதுபோல் இவர்களோடு கொல்கத்தா அணியும் சேர்ந்து வெளியேறியதில்லை. ஆனால் இந்த முறை இரசிகர்களால் விரும்பத்தகாத நிகழ்வுகள் இரண்டும் அரங்கேறி இருக்கின்றன.

- Advertisement -

ஒரு புறத்தில் கோப்பையை இதுவரை கைப்பற்றியுள்ள ஐந்து அணிகளில் ராஜஸ்தான் அணி மட்டுமே ப்ளேஆப்ஸ் சுற்றில் இருக்க, மற்ற நான்கு அணிகளான சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் கூண்டோடு வெளியேறி இருக்கின்றன. சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இந்த ஐ.பி.எல் சீசன்தான் மிக மோசமான சீசனாகவும் பதிவாகி இருக்கிறது. இதேவேளையில் புதிய அணிகள் லக்னோ, குஜராத் இரு அணிகளும் ப்ளேஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறி அசத்தி இருக்கின்றன. லக்னோ அணி மூன்றாவது இடம் பிடிக்க, குஜராத் அணியோ பத்து வெற்றிகளோடு முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்த நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த குஜராத் அணிகள் மோதும், முதல் குவாலிபையர் போட்டியும், புள்ளி பட்டியலில் மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்த லக்னோ, பெங்களூர் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்கடுத்த இரண்டாவது குவாலிபையர் போட்டியும், இறுதி போட்டியும், குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

ப்ளேஆப்ஸ் சுற்று போட்டிகளில் மழை குறுக்கிட்டால், மைதான சூழல் சரியாய் இருந்தால் ஐந்து ஓவர்கள் போட்டியாகவோ இல்லை இரவு 12.50 மணிவரை இடையூறு நீடித்து, இதற்குள் நிலைமை சரியானால் சூப்பர் ஓவர் முறையும், இதற்குள் நிலைமை சரியாகாவிட்டால், புள்ளி பட்டியலில் யார் அதிகப் புள்ளிகள் பெற்றார்களோ அவர்களே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் எல்லாம் வழக்கம்போல் 7.30 மணிக்குத் துவங்குகின்றன.

- Advertisement -

ப்ளேஆப்ஸ் சுற்றுப் போட்டிக்கான விதிகளிலிருந்து, இறுதி போட்டி விதி கொஞ்சம் மாறுகிறது. என்னவென்றால்; இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டு போட்டி நடத்த முடியாமல் போனால், மறுநாள் நடத்தப்படும். மறுநாளும் மழை குறுக்கீடு வந்தால், ஐந்து ஓவர் போட்டிக்குப் பார்ப்பார்கள். இல்லையென்றால் சூப்பர் ஓவருக்குப் போகும். அதுவும் முடியாவிட்டால் இறுதி போட்டியில் வந்திருக்கும் அணிகளில் அதிகப் புள்ளிளை லீக் சுற்றில் எடுத்தவர்கள் சாம்பியன்களாக அறிவிக்கப்படுவார்கள்!