முன்னாள் ஆர்சிபி ரெக்கார்டு கேப்டனை ஹெட் கோச்சாக தட்டி தூக்கிய ஹைதராபாத் சன் ரைசர்ஸ்!

0
226
RCB

ஐபிஎல் தொடரின் 10 அணிகளில் ஒன்றான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்பொழுது தனது அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த லெஜன்ட் பிரையன் லாராவை விடுவித்து புதிய பயிற்சியாளரை கொண்டு வந்திருக்கிறது!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் டாம் மூடி தலைமையிலான பயிற்சியாளர் குழுவை கலைத்து, அதற்கடுத்து இரண்டு ஆண்டுகளுக்கான பயிற்சியாளர் குழுவின் தலைமை பயிற்சியாளராக பிரையன் லாராவை கொண்டு வந்தது.

- Advertisement -

அவருடைய பயிற்சி காலத்தில் கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் அணியை பொறுத்தவரை நல்ல முறையிலேயே உருவாக்கி இருந்தார்கள். ஆனால் உருவாக்கப்பட்ட அணியின் வீரர்களை ஒருங்கிணைத்து நல்ல முடிவுகளை கொண்டு வருவதில் அவர்கள் பின்தங்கி விட்டார்கள்.

இந்த காரணத்தால் தற்பொழுது லாராவை தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து இருக்கிறார்கள். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது முடிவுக்கு வருகிறது, அவருடைய பணிகளுக்கு மிகவும் நன்றி என்று பிரிவு வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

இவருடைய இடத்திற்கு மிகவும் அனுபவசாலியான நியூசிலாந்து நாட்டை சேர்ந்த இடது கை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் டேனியல் வெட்டேரி கொண்டுவரப்பட்டு இருக்கிறார். தற்போது இவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இவர் 2011 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியதோடு, அந்த சீசனில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர்.

மேலும் இவர் 2014 முதல் 18 ஆம் ஆண்டு காலம் வரையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது லாராவை விடுவித்து அந்த இடத்திற்கு இவரை கொண்டு வந்திருக்கிறது ஹைதராபாத் சன்ரைசர்ஸ்.

தற்பொழுது 44 வயதாகும் இவர், சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்களுக்கு மேல் குவித்து, 650 விக்கட்டுகளுக்கு மேல் கைப்பற்றி இருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் இவர் பெங்களூரு அணிக்கு மட்டும் இல்லாமல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் விளையாடியிருக்கிறார். கிரிக்கெட்டில் வீரராகவும் பயிற்சியாளராகவும் இவருக்கு மிகச் சிறப்பான அனுபவம் இருக்கிறது. எனவே அடுத்த வருட ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி மீண்டெழுந்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!