இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது மட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியிலேயே அறிமுகமாகி நன்றாக விளையாடிய நித்திஷ் குமார் ரெட்டி முக்கிய தலைப்புச் செய்திகளில் ஒன்றாக இடம் பிடித்தார். எனவே இந்திய அணி அடுத்தடுத்து விளையாடும் டெஸ்ட் தொடர்களில் இவரது இடம் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த தொடருக்கு அடுத்ததாக வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக இதே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில் நிதீஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டதை போல 30வயது வெங்கடேஷ் ஐயரும் அடுத்த தொடரில் தேர்வு செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
அவர் மீது ஒரு கண் வேண்டும்
இது குறித்து கவாஸ்கர் கூறும் பொழுது “இந்திய அணியில் மற்றொரு ஆல் ரவுண்டராகவும் இடது கை வேகப்பந்து வீச்சாளராகவும் இருக்கக்கூடிய வெங்கடேஷ் ஐயர் மீது இந்திய நிர்வாகம் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருப்பினும் அவரது பந்து வீச்சில் அவர் சிறிய வேலைகளை செய்ய வேண்டும். அவர் ஏற்கனவே இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடர்கள் விளையாடி இருப்பதால் அடுத்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அவர் நிச்சயம் இருக்க வேண்டும்” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில்.. முதல்முறையாக நிகழ்த்தப்பட்டுள்ள வரலாற்று சாதனை.. இந்தியா 2வது இடம்.. முழு விபரம்
நித்திஷ் ரெட்டி மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவருமே ஐபிஎல் தொடரில் விளையாடி பிரபலமான இந்திய வீரர்கள் அவர். நிதீஷ் குமார் ரெட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும், வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடி சிறப்பான பங்களிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது இந்திய அணியில் நித்திஷ் ரெட்டி சிறப்பாக விளையாடி வரும் நிலையில் வெங்கடேஷ் ஐயரும் அடுத்த இங்கிலாந்து தொடரில் தடம் பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






