ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 22 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அசத்திய இந்திய துவக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனின் சிறந்த பேட்டிங் அணுகுமுறை குறித்து இந்திய கிரிக்கெட் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் வெகுவாகப் பாராட்டிப் பேசி இருக்கிறார்.
போட்டியின் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி சூழ்நிலையைப் புரிந்துகொண்ட பிறகு, அதிரடியாக ரன்களைக் குவித்த சஞ்சு சாம்சனின் இந்த ஸ்மார்ட் அப்ரோச் அவருக்குத் தொடர்ச்சியாகப் பெரிய ரன்களை ஈட்டித் தரும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் 10 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சஞ்சு சாம்சன், அணியின் பிரஷரைக் குறைக்கும் வகையில் நிதானம் காட்டி, பின்னர் ஒரே ஓவரில் நான்கு பவுண்டரிகள் விளாசி அதிரடிக்கு மாறினார். இந்த அப்ரோச் தான் டி20 போட்டிகளில் ஓப்பனர்ஸ்க்கு மிகவும் செட் ஆகும்.
சஞ்சு சாம்சனின் இந்த இன்னிங்ஸ் குறித்து சுனில் கவாஸ்கர் பேசும்போது “சஞ்சு சாம்சன் இதேபோல நிதானமாகத் தொடங்கி சூழ்நிலைக்கு ஏற்ப பிறகு அதிரடியைக் காட்டினால், அவர் நிச்சயமாக ஃபெயில் ஆக மாட்டார் என்றும், தொடர்ந்து 50 மற்றும் 60 ரன்களைக் குவிப்பார்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து கவாஸ்கர் பேசும்போது “முதல் பந்தில் இருந்தே பேங் பேங் என்று பெரிய ஷாட்களுக்கு முயற்சி செய்யாமல், ஆட்டத்தை உணர்ந்து விளையாடுவதுதான் டெர்ரிஃபிக் பிளேயரான சஞ்சு சாம்சனுக்கு எப்போதும் மிகப்பெரிய சக்சஸ் கொடுக்கும்” என்று கூறி இருக்கிறார்.