ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை தொடர்ந்து விளையாட வைப்பது குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய மூவரும் ஒரே ஆடும் லெவன் அணியில் விளையாட வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவர் கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கைஃப் தெரிவித்துள்ளார். இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளதால், அடுத்த போட்டியில் ஒரு பந்துவீச்சாளரைக் குறைத்து வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்கலாம் என்றும், அபிஷேக் சர்மா சில ஓவர்கள் பந்துவீசக்கூடியவர் என்பதால் அணியின் சமநிலையை அதன்மூலம் சரிசெய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து முகமது கைப் கூறும்போது “அடுத்த 2 மாதங்களாக இருக்கலாம், 4 மாதங்களாக இருக்கலாம், 6 மாதங்களாக இருக்கலாம். எப்படியாவது இந்த மூன்று வீரர்களும் ஒன்றாக விளையாட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. சஞ்சு சாம்சன் vs வைபவ் சூர்யவன்ஷி என்று பார்க்க வேண்டியதில்லை. இவர்கள் மூவரும் மிகவும் சிறப்பான திறமை கொண்டவர்கள். வைபவ் சூர்யவன்ஷியை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் வெளியே வைத்திருப்பீர்கள்? மூவரும் பொருந்தும் வகையில் ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.