” இந்த ரெண்டு பேரும் தான் அடுத்த தோனி & யுவராஜ் சிங் ” இந்திய அணியின் ஜாம்பவான் கவாஸ்கர் உறுதி !

0
409
MS Dhoni Yuvraj Singh and Sunil Gavaskar

ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அடுத்த தோனி மற்றும் யுவராஜ் சிங் போல வருவார்கள் என்று உறுதியாக கூறியிருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வந்தது. இதில் 2-1 என்ற கணக்கில் டி20 மற்றும் ஒரு நாள் ஆகிய இரண்டு தொடரையும் கைப்பற்றியது.

ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியின் போது, இந்திய அணி 260 ரன்கள் இலக்கை துரத்தியது. 72 ரன்கள் இருந்தபோது நான்கு விக்கெட்டுகளை கடந்து தடுமாறி வந்த இந்திய அணிக்கு, இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட் இருக்கு 133 ரன்கள் சேர்த்தது.

ஹர்திக் பாண்டியா துவக்கத்தில் அதிரடி காட்டினாலும் அரைசதம் கடந்த பிறகு சற்று நிதானமாக விளையாடினார். அவர் 71 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். பந்துவீச்சிலும் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி மிகச்சிறந்த ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட் அரைசதம் கடந்த பிறகு, ஆட்டத்தை அடுத்த கியருக்கு மாற்றி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இறுதிவரை ஆட்டமில்லாமல் இருந்த இவர் 125 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் ரிஷப் பன்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பாக பங்களிப்பை கொடுத்தனர். இவர்கள் இவர்கள் இருவருக்கும் முன்னாள் வீரர்கள் இந்நாள் வீரர்கள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தோனி மற்றும் யுவராஜ் இருவருடன் ஒப்பிட்டு பாராட்டுதலை தெரிவித்து இருக்கிறார்.

அவர் கூறுகையில், “ரிஷப் பண்ட், இக்கட்டான சூழலில் களமிறங்கி நிதானமாக விளையாடி விக்கெட் இழக்காமல் வெற்றியை உறுதி செய்தார். துவக்கம் முதலே எதைப் பற்றியும் யோசிக்காமல் அதிரடியாக விளையாடும் பண்பை கொண்ட ரிஷப் பண்ட், சமீப காலமாக அணியின் வெற்றிக்கு எது தேவை என்று கணித்து விளையாடுகிறார். 1983, 2011 ஆகிய உலகக் கோப்பைகளில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. சரியான நேரத்தில் ஹர்திக் பாண்டியா குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. மேலும் இவர் இத்தகைய செயல்பாட்டை கொடுத்து வருவதும் கூடுதல் பலமாக இருக்கிறது. இவர்கள் இருவரையும் இந்திய அணியின் அடுத்த தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவராக பார்க்கிறேன். வரும் உலக கோப்பையிலும் இவர்களது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.” என்றார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதன் மூலம் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.