“ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி திடீர் மாற்றம்” – பிசிசிஐ வெளியிட்ட அவசர அறிவிப்பு!

0
377

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது . இந்தத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த ஒன்பதாம் தேதி நாக்பூரில் துவங்கியது . இந்தப் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . இந்த டெஸ்ட் போட்டி மூன்று நாட்களிலேயே முடிவு அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 17 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகளுக்காக இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்திய அணியில் இருந்து ஜெய்தேவ் உனட்கட் ரஞ்சிக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆடுவதற்காக விடுவிக்கப்பட்டுள்ளார் .

- Advertisement -

இந்த இரண்டு அணிகளும் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலா நகரில் மார்ச் ஒன்றாம் தேதி துவங்கி ஐந்தாம் தேதி வரை நடைபெற இருந்தது . இந்நிலையில் அந்தப் போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முன்னிட்டு தர்மசாலா மைதானத்தின் ஆடுகளம் மறுசீரமைக்கப்பட்டது. மேலும் ஆடுகளத்தின் அவுட் ஃபீல்டும் புதியதாக அமைக்கப்பட்டது . போட்டி துவங்குவதற்கு முன்பாக பிசிசிஐ யின் தலைமை ஆடுகள பராமரிப்பாளர் தர்மசாலா ஆடுகளத்தின் தன்மைகளை ஆய்வு செய்தார் அவரது அறிக்கையை தொடர்ந்து அந்தப் போட்டியை தர்மசாலாவில் இருந்து மாற்றி இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது .

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிசிசிஐ தர்மசாலா மைதானத்தின் ஆடுகளம் மற்றும் அவுட்ஃபீல்டு அங்கு நிலவும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக விளையாடுவதற்கு தயாரானதாக இல்லை என அறிவித்திருக்கிறது. இமாச்சலப் பிரதேசம் மாநிலம் இமயமலை அடிவாரத்தில் அமைந்திருப்பதால் அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது . இதன் காரணமாக அவுட் ஃபீல்டில் போதுமான அளவு  புற்கள் வளர முடியவில்லை. மேலும் இந்தப் புற்கள் முழுமையாக வளருவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால் அந்தப் போட்டி தர்மசாலாவில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

- Advertisement -

இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை இரண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன . அந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று இருக்கிறது . 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை 321 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி . மேலும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 பெண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .