சுப்மன் கில் அசத்தல் சதம்; தொடரும் அசத்தும் பேட்டிங் ஃபார்ம்!

0
3020
Gill

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரராய் 23 வயதான பஞ்சாபை சேர்ந்த சுப்மன் கில் பார்க்கப்படுகிறார். அவரது பேட்டிங் திறமை பல இந்திய முன்னணி வீரர்களால் வியக்கப்படுகிறது. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையை பிரித்திவி ஷா தலைமையில் இந்திய அணி வென்ற போது, அந்த வெற்றிக்கு முக்கியமான காரணமாய் பேட்டிங் வரிசையில் இருந்தவர் சுப்மன் கில்!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, இந்த வருடம் மெகா ஏலத்திற்கு முன்பாகவே ஐபிஎல் தொடருக்கு புதிய அணியாக வந்திருந்த குஜராத் அணி வாங்கியது. இந்த வருடம் அந்த அணிக்கான இவரது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. மேலும் இவரது ஸ்டிரைக் ரேட்டும் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி ஒருநாள் போட்டிகளுக்கான மாற்று துவக்க ஆட்டக்காரராக ருதுராஜை முயற்சி செய்து பார்த்தது. அவர் சரி வராமல் போகவே அடுத்து அந்த இடத்திற்கு, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் சுப்மன் கில்லை இந்திய அணி நிர்வாகம் கொண்டுவந்தது. அவர் அந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்து ஜிம்பாப்வே உடனான தொடரிலும் அவரது மிகச் சிறப்பான ஆட்டம் தொடர்ந்தது. இந்தத் தொடரில் அவர் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார். தற்போது அவர் ஒன்பது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 499 ரன்களை குவித்துள்ளார். இவரது ரன் சராசரி 71 என்பதும் ஸ்டிரைக் ரேட் 105 என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் இங்கிலாந்து உள்நாட்டு டெஸ்ட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் கிளாமர்கன் அணிக்காக இங்கிலாந்தில் விளையாடி வருகிறார். தற்போது சசக்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் கவுண்டி சதத்தை அடித்து இருக்கிறார். 139 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் பதினாறு பவுண்டரி 2 சிக்சருடன் 119 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இதற்கு முன்னால் வொர்ஸ்செஸ்டர்ஸையர் 92 ரன்களை விளாசி முதல் சதத்தை தவறவிட்ட இருந்தார். அடுத்து மிடில்சக்ஸ் அணியுடனான ஆட்டத்தில் 21, 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் 3-வது ஆட்டத்தில் திரும்பிவந்த சுப்மன் கில் தனது முதல் கவுண்டி சதத்தை பதிவு செய்திருக்கிறார். 3 ஆட்டம் 5 இன்னிங்ஸ்களில் 244 ரன்களை 61 ரன் சராசரியில் அடித்திருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் முடிந்ததும், தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கு சுப்மன் கில் இந்தியா திரும்புவது உறுதிதான் என்று தெரிகிறது.