0 விக்கெட் 100 ரன்கள்.. அடுத்த போட்டியில் விளையாடுவாரா ஸ்டார்க்.?. ஸ்டூவர்ட் பிராட் ஓபன் டாக்

0
182

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் வலுவாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடித்தாலும், 24.75 கோடி கொடுத்து வாங்கப்பட்ட ஸ்டார்க்கின் பந்துவீச்சு நிலைமை கவலை அளிப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கூறியிருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என்று கருதி ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை 24.75 கோடி கொடுத்து வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இனி தனது பந்துவீச்சு வலுவடைந்து விட்டதாகவே அந்த அணி கருதியது என்று கூட சொல்லலாம்.

- Advertisement -

ஆனால் இவ்வளவு கோடி கொடுத்து வாங்கும் அளவிற்கு ஸ்டார்க் தற்போது தகுதியானவர் இல்லை என்று பல முன்னாள் வீரர்கள் அப்போதே கொல்கத்தா அணியை விமர்சித்திருந்தனர். காரணம் சமீபத்தில் அடைந்த காயத்தினால் ஆஸ்திரேலியா அணியை விட்டே ஒதுங்கி இருந்த ஸ்டார்க், அதற்குப் பின்னர் அணியில் இணைந்தாலும் பந்து வீச்சில் பின் தங்கியிருந்தார். இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் லீக் போட்டிகளுக்குப் பின்னரே அவர் ஓரளவு பந்துவீச்சில் நல்ல பார்முக்கு வந்தார்.

இந்த நிலையில் தங்களது பந்துவீச்சை வலுப்படுத்த கொல்கத்தா அணி அவரையும் அதிக விலை கொடுத்து வாங்கியது. கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர் கொண்ட போது அதில் பந்துவீசி ஸ்டார்க் நான்கு ஓவர்களில் 53 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அப்போட்டியில் விக்கெடுகள் எதுவும் வீழ்த்தவில்லை. பின்னர் பெங்களூரு அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 47 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

மிட்செல் ஸ்டார்க் குறித்து ஸ்டூவர்ட் பிராட்

இருப்பினும் கொல்கத்தா அணி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று விட்டதால் இவர் மீது இன்னும் பெரிய விமர்சனங்கள் எழாமல் இருக்கிறது. எனவே இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில்
“உங்களது செயல்பாடு சரியாக இல்லாத போதும் உங்கள் அணி வெற்றி பெற்றால், நீங்கள் அடுத்த போட்டியிலும் விளையாடுவீர்கள்.

- Advertisement -

இப்போது ஸ்டார்க்கிற்கும் அதுதான் நடக்கிறது. கொல்கத்தா அணி வெற்றி பெறுவதால் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இருப்பினும் விக்கெட்டுகள் எதுவும் வீழ்த்தாமல் 100 ரன்கள் கொடுத்திருக்கும் நிலையில் அவரது அணியும் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தால் அவரது இடம் நிச்சயம் ஆபத்தாகி இருந்திருக்கும். அவர் தனது பார்மை மீட்டெடுக்கும் போது நிச்சயமாக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இருப்பினும் ஐபிஎல் குறித்து அவருக்கு இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வு தேவை என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க: கோலி 120 ரன் அடித்திருப்பார்.. தப்பு அவங்க மேல தான்.. விமர்சனங்களுக்கு கவாஸ்கர் பதிலடி

ஸ்டார்க் தனது கேப்டன் மற்றும் அவர் அமைத்திற்கும் பீல்டிங் யூனிட்டை நன்கு அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கிறேன். மேலும் அவர் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதால் அந்தத் தொகையும் அவருக்கு அழுத்தத்தை தரலாம்” என்று கூறியிருக்கிறார். ஸ்டூவர்ட் பிராட் கூறியதைப் போலவே இரண்டு போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்திருந்தால் நிச்சயமாக ஸ்டார்க்கின் இடம் கேள்விக்குறியாகி இருக்கும். எனவே அடுத்தடுத்த போட்டிகளில் ஸ்டார்க் மீண்டு வருவார் என்று நம்பலாம்.