ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதிய நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .

இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு ஆஷஸ் கோப்பையையும் தக்க வைத்துக் கொண்டது.இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை துவங்கியது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 185 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுமான ஸ்டீவன் ஸ்மித் மிகச் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியா அணியை சரிவிலிருந்து மீட்டார் .

மிகச் சிறப்பாக ஆடிய அவர் இந்த டெஸ்ட் போட்டியில் 71 ரன்கள் எடுத்து சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார் . இவரது சிறப்பான ஆட்டத்தாலும் பின் வரிசை ஆட்டக்காரர்களின் பங்களிப்பாளும் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்கள் எடுத்து ஆள் அவுட் ஆனது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை விட 12 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது

இந்த டெஸ்ட் போட்டியில் 71 ரன்களை எடுத்ததன் மூலம் ஓவல் மைதானத்தில் அதிக ரன்களை குவித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ஸ்டீவன் ஸ்மித் . இதன் மூலம் உலக கிரிக்கெட் ஜாம்பவான் சர் டான் பிராட்மேன் மற்றும் இந்தியாவின் ராகுல் டிராவிட் ஆகியோரின் சாதனைகளை முறியடித்து முதல் இடத்தில் இருக்கிறார். உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக இருக்கும் ஸ்டீவன் ஸ்மித்தின் இந்த சாதனை மிகச் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது .

- Advertisement -

இதுவரை ஓவல் மைதானத்தில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி இருக்கும் ஸ்டீவன் ஸ்மித் 617 ரன்களை எடுத்திருக்கிறார் . இதில் மூன்று சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும் . இந்தியா அணிக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மைதானத்தில் இவரது சராசரி 88 ஆகும் .

ஸ்டீவன் ஸ்மித் டான் பிராட் மேன் சாதனையை முறியடித்து இருந்தாலும் டான் பிராட்மேன் எடுத்த 553 ரன்கள் வெறும் நான்கு இன்னிங்ஸ்களில் எடுக்கப்பட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவரது சராசரி 138. இந்த மைதானத்தில் நான்கு இன்னிங்ஸ்களில் ஆடி இருக்கும் டான் பிராட்மேன் 232, 244 மற்றும் 77 ரன்களை குவித்திருக்கிறார். அவர் தனது இறுதி இன்னிங்ஸில் 0 ரன்னில் ஆட்டம் இழந்ததால் தான் அவரது சராசரி 99.94 ஆக இருக்கிறது .

ஓவல் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வெளிநாட்டு வீரர்கள்:

617 – ஸ்டீவன் ஸ்மித்( ஆஸ்திரேலியா)

553 – சர் டான் பிராட்மேன்( ஆஸ்திரேலியா )

478 – ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா)

448 – புரூஸ் மிட்செல் (தென்னாப்பிரிக்கா)

443 – ராகுல் டிராவிட் (இந்தியா)