உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சில அணிகள் குறைவான ஒரு நாள் அல்லது குறைவான டெஸ்ட் போட்டிகளை மட்டுமே விளையாடுவதாக புகார் எழுந்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால் இந்திய அணி கடந்த 2024 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் மட்டும் தான் விளையாடியது. இப்படி அட்டவணையில் பல குழப்பங்கள் நிலவுகிறது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி 2025 ஆம் ஆண்டு வெறும் நான்கு டெஸ்ட் போட்டிகள் மட்டும் தான் விளையாடுகிறது.
ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து நவம்பர் மாதம் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டி வரை இடைப்பட்ட மாதத்தில் இலங்கை கிரிக்கெட் அணி 13 ஒரு நாள் மற்றும் 12 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 2025 இல் நடைபெறும் நான்கு டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி ஜனவரி,பிப்ரவரி மாதமே நடந்து முடிந்து விடுகிறது.
அட்டவணை குறித்து மேத்யூஸ் கேள்வி
இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ள இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மேத்யூஸ், “2025 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கை அணி வெறும் நான்கு டெஸ்ட் போட்டிகள் மட்டும் தான் விளையாடுகிறது என்ற அட்டவணையை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அதிலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜனவரி மாதமே நடந்து முடிவடைந்து விடுகிறது.
டெஸ்ட் போட்டிகள் எங்களுக்கு அதிக அளவு நடத்தப்படாததை நினைத்து ஏமாற்றமாக இருக்கிறது. ஒரு டெஸ்ட் தொடருக்கும் இன்னொரு டெஸ்ட் தொடருக்கும் இடையே இவ்வளவு மாதங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கிரிக்கெட் என்பது ரிதம் சம்பந்தப்பட்டது.”
அட்டவணையை மாற்ற மேத்யூஸ் கோரிக்கை
“இவ்வளவு மாதங்கள் இடைவெளி இருந்தால் நிச்சயம் ஒவ்வொரு வீரரின் ஆட்டமும் பாதிக்கப்படும். இது குறித்து ஐசிசி மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்” என்று ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய அணியில் இவர் ஓவர்ரேட்டட் கிரிக்கெட்டர்.. இவருக்கு பதில் ருதுராஜ் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தாங்க – ஸ்ரீகாந்த் பேட்டி
37 வயதான மேத்யூஸ் இலங்கை அணிக்காக 116 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 8042 ரன்களை அடித்திருக்கிறார். மேத்யூஸ் பத்தாயிரம் ரன்கள் என்ற மைக் கல்லை தொட வேண்டும் என்றால் அவர் 1958 ரன்கள் அடிக்கவேண்டும். ஆனால் இலங்கை அணி இவ்வளவு குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால் மேத்யூஸ் கனவு நிறைவேறுவது சாத்தியம் கிடையாது.