திக் திக் ஆட்டத்தில் பங்களாதேஷை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி!

0
107
Sl vs Ban

15வது ஆசிய கோப்பையில் இன்று இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மிக முக்கியமான போட்டி மிக பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி தான் அவர்களது குழுவில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது!

இந்த நிலையில் இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். பங்களாதேஷ் அணி தரப்பில் அபாடட் உசைன் அறிமுகமானார். அதேபோல் அசிதா பெர்னார்டோ இலங்கை தரப்பில் அறிமுகமானார்.

- Advertisement -

பங்களாதேஷ் தரப்பில் கடந்த ஆட்டத்தில் விளையாடிய துவக்க வீரர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மிராஸ், சபீர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி ஓரளவுக்கு பங்களாதேஷுக்கு நிலையான ரன்களை தந்தது. இதற்கடுத்து பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 24 ரன்கள், அபிப் ஹூசைன் 22 பந்துகளுக்கு 39 ரன்கள், மகமதுல்லா 22 பந்துகளுக்கு 27 ரன்கள், மோசடிக் உசைன் 9 பந்துகளில் 24 ரன்கள் என அடிக்க 20 ஓவர்களின் முடிவில் பங்களாதேஷ் அணி 183 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா 19 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருடன் களமிறங்கிய இன்னொரு துவக்க ஆட்டக்காரர் குஷால் மெண்டிஸ் 4 எளிதான அவுட் வாய்ப்புகளில் இருந்து தப்பித்து 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். நான்கு அவுட் வாய்ப்புகளை இவருக்கு பங்களாதேஷ் வீரர்கள் வீணடித்து அதற்கான பலனை வாங்கி கட்டிக் கொண்டார்கள்.

இதையடுத்து இலங்கை அணியின் கேப்டன் சனகா முப்பத்தி மூன்று பந்துகளில் 45 ரன்கள் அடிக்க ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்திற்கு சென்றது. 19வது ஓவரில் இலங்கை கேப்டன் ஆட்டமிழக்க, கடைசி 2 ஓவர்களில் 25 ரன்கள் வேண்டும் என்கிற நிலை உருவானது. இந்த சமயத்தில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து இருந்தது.

- Advertisement -

இதையடுத்து இந்த ஆட்டத்தில் அறிமுகமான அசிதா பெர்னார்டோ தான் சந்தித்த முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசி ஓவருக்கு 8 ரன்கள் தேவைப்பட மீண்டும் அந்த ஓவரின் 2-வது பந்தை சந்தித்த அவர் மீண்டும் ஒரு பவுண்டரி அடிக்க, அதற்கு அடுத்த பந்தில் 2 ரன்கள் நோ பாலில் வர இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு நுழைந்தது.

இந்த ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி குஷால் மெண்டிஸ்க்கு வாய்ப்புகளை அள்ளி வழங்கியதும், ஓவர்களை மெதுவாக வீசியதால் கடைசி ஓவரில் ஒரு பீல்டர் வெளியே நிற்க முடியாமல் போனதும் பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. போட்டிக்கு முன்பு இரு அணி வீரர்கள் பயிற்சியாளர்கள் முன்னாள் வீரர்கள் என கடுமையான வார்த்தை யுத்தம் சமூக வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில் இலங்கை அணி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது இலங்கை ரசிகர்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.