இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் கவுதம் கம்பீர் பேசி வரும் விஷயங்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தற்பொழுது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவர் எவ்வளவு நாட்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்பது குறித்து கவுதம் கம்பீர் பேசி இருப்பது பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்.
கவுதம் கம்பீர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்டார். அந்தச் சந்திப்பில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
மேற்கொண்டு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி எவ்வளவு காலம் விளையாடுவார்கள் என்பது குறித்து பேசிய கவுதம் கம்பீர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் அவர்கள் விளையாடுவார்கள் என்றும், மேற்கொண்டு அவர்கள் உடல் தகுதியுடன் இருந்தால் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவில் விளையாடுவார்கள் என்றும் கூறியிருந்தார்.
அதே சமயத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர்க்கும் முன்பாக பேசியிருந்த கம்பீர் கூறும் பொழுது, அந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு தன்னுடைய அணியில் இடம் இல்லை என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து தற்போது பேசியிருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
கம்பீர் பற்றி பேசிய ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “கௌதம் கம்பீர் ஒரு ஹிப்பாப்பர். அவர் ஒரு உண்மையான யுடர்ன் அடிக்கும் நபர். விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் சிறப்பாக விளையாடவில்லை என்றால் தன்னுடைய அணியில் இருக்க மாட்டார்கள் என்று இந்த டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக அவர் பேசி இருந்தார். பின்னர் அதிலிருந்து யுடர்ன் எடுத்து இந்த இருவரைப் போல சிறந்த வீரர் யாருமில்லை என்றார். மேலும் இவர்களுக்கு நிறைய கிரிக்கெட் இருக்கிறது என்றும் கூறினார். மேலும் அவர்கள் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை விளையாடலாம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க : அசைக்க முடியாத ஷாஹீன் அப்ரிடியின் உலக சாதனை.. முறியடித்த ஓமன் வீரர்.. கிரிக்கெட்டில் புது வரலாறு
ரோகித் சர்மா ஒரு நல்ல வீரர். ஆனால் அவரது வயது தற்போது 37. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை விளையாடும் பொழுது அவருடைய வயது 40 ஆக இருக்கும். நீங்கள் தோனி மற்றும் சச்சின் போல பிட்டாக இல்லை என்றால் 40 வயதில் உங்களால் விளையாட முடியாது. விராட் கோலி 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை விளையாடலாம். ஆனால் மிஸ்டர் கம்பீர் ரோகித் சர்மா விளையாடுவது மிகவும் கடினம்” என்று கூறியிருக்கிறார்.






