இந்திய அணியின் சுற்றுப்பயணம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக வீரர்களின் காயம் அமைந்திருக்கிறது. இப்படியான நிலையில் தற்போது இலங்கை அணியின் தூணாக இருக்கும் நட்சத்திர வீரர் கெஞ்சி இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு எதிராக போட்டியை டை செய்தது. இதன் காரணமாக அடுத்தடுத்து இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் சிறப்பாக விளையாட முடியும் என்கின்ற நம்பிக்கையில் இலங்கை அணி இருக்கிறது.
மேலும் இந்திய அணியின் சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் துஷ்மந்த சமீரா, பினூரா பெர்னாடோ, நுவன் துஷாரா ஆகியோர் விலகி இருந்தார்கள். இந்த தொடரை இலங்கை அணி 0-3 என மொத்தமாக இந்திய அணியிடம் இழந்தது.
இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் தில்சன் மதுசங்கா மற்றும் மதிஷா பதிரனா இருவரும் காயத்தால் விலகினார்கள். இப்படி ஒட்டுமொத்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டும் காயத்தால் அடுத்தடுத்து காலியானது.
ஒரு வழியாக மாற்று வீரர்களை கண்டுபிடித்து வந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை டை செய்து, இரண்டாவது போட்டியை வெல்ல இலங்கை அணி முயற்சி செய்யும் வேளையில், நட்சத்திர சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா இடது காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பின் காரணமாக நடப்பு ஒருநாள் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார்.
கடந்த போட்டியில் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை கொடுத்ததோடு பந்துவீச்சில் விராட் கோலி உட்பட மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை டை செய்வதற்கு வனிந்து ஹசரங்கா முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் அவரும் காயத்தின் காரணமாக ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருடைய இடத்திற்கு சுழல் பந்துவீச்சாளர் ஜெஃப்ரி வாண்டர்சே சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: பிரதர் அர்ஷ்தீப் இப்படியா பண்ணுவிங்க?.. அதுக்கு நீங்க இத பண்ணி இருக்கலாம் – பாக் கம்ரன் அக்மல் விமர்சனம்
மேலும் இலங்கையில் தற்போது ப்ளூ காய்ச்சல் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இலங்கை அணிக்கு இந்திய சுற்றுப்பயணம் காயத்தின் காரணமாக பெரிய தலைவலியையும் நெருக்கடியையும் உருவாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!