நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் கடைசி விக்கெட்டுக்கு கோல்டன் டக் ஆகி போட்டியையும் டை ஆக்கியது சமூக வலைதளத்தில் பரவலாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் 15 பந்துகளுக்கு ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சில் சிவம் துபே ஒன்பதாவது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். இருந்தாலும் கூட ஒரு ரன்தான் தேவை என்கின்ற காரணத்தினால் அடுத்து வந்த அர்ஷ்தீப் எப்படியும் எடுத்து விடுவார் என்கின்ற நம்பிக்கை அணி நிர்வாகத்திற்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இருந்தது.
ஆனால் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆடுவதற்கு மிகவும் கடினமான ஷாட்டான ஸ்லாக் ஸ்வீப் ஆடி முதல் பந்திலேயே விக்கெட்டை கொடுத்து போட்டியையும் டை ஆக்கிவிட்டார். இது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியாளர் கம்பீர் என எல்லோரையும் சரியான வெறுப்பாக்கி விட்டது.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் “அர்ஷ்தீப் செய்த வேலையை பாருங்கள். கையில் 13, 14 பந்துகள் இருக்கிறது. ஒரே ஒரு ரன் எடுத்தால் வெற்றி பெற்று விடலாம். ஆனால் அவர் பெரிய ஷாட் விளையாட போய் ஆட்டம் இழக்கிறார். இதுவே ஒரே ஒரு பந்து மட்டும் இருந்தாலும் கூட அவர் விளையாடியதை சரி என்று கூறலாம். இவர் அமைதியாக இருந்திருந்தால் கூட அடுத்து சிராஜ் வேலையைச் சரியாகச் செய்திருப்பார்”
“இப்படி ரன்கள் தானாகவே வந்திருக்கும். நீங்கள் ஒரு ஆப் ஸ்பின்னரை விளையாடும் பொழுது காலை கீழே போட்டு அடித்தால் நிச்சயம் ஆட்டம் இழப்பீர்கள். இப்படி ஒரு வேலையைநீங்கள் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. சரி இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அடுத்த முறை இப்படி செய்தால் ரன்கள் எடுக்க முடியாது”
இதையும் படிங்க: கம்பீர் வாஷிங்டன் சுந்தருக்கு பண்ண அதுதான்.. இந்திய அணி ஜெயிக்காத காரணம்.. பாகிஸ்தான் பசித் அலி விமர்சனம்
“உங்களுக்கு நேராக இருக்கும் பீல்டர்கள் உள்ளே இருந்தார்கள். நீங்கள் அடிப்பதாக இருந்தால் நேராக தூக்கி அடித்திருக்கலாம். ஆனால் அப்படி அடித்ததுதான் பிரச்சனையாகிவிட்டது. ஆனால் இந்தியா எப்படி திரும்பி வருகிறது என்று பாருங்கள். ஏனென்றால் அவர்கள் ஒருமுறை செய்த தவறை இன்னொரு முறை செய்ய மாட்டார்கள். இதனால்தான் அவர்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும் அடுத்த போட்டியில் இலங்கை எவ்வளவு தவறுகளை குறைக்கிறது? என்று பார்க்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.