வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தது குறித்து இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் விமர்சித்து பேசியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.
இந்த போட்டியில் மயங்க் யாதவ் தனது முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பாகவே தொடங்கினார். ஆனால் அவர் வீசிய இரண்டாவது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் 20 ரன்களை விளாசினார்கள். இதனால் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தேவையான நல்ல மொமண்டம் கிடைத்துவிட்டது.
இறுதியில் மயங்க் யாதவ் தனது 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 52 ரன்களை வாரி வழங்கி மிகவும் எக்ஸ்பென்சிவ் பௌலராக மாறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 247 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்தது. பின்னர் சேஸிங் செய்த இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது.
இதுகுறித்து வாசிம் ஜாஃபர் பேசும்போது “அவர் அளவுக்கு அதிகமாக ஷார்ட் பால் வீசிவிட்டார். ஷார்ட் பால் வீச முயற்சிக்கும்போது 5 வைட் பால்களும் சென்றன. எதிரணி பேட்டர்கள் இதை எதிர்பார்த்து காத்திருந்தது போல தெரிந்தது, மேலும் அந்த 20 ரன்கள் ஓவர் அவர்களுக்கு ஒரு கிவ்க் ஸ்டார்ட் ஆக அமைந்துவிட்டது. புதிய பந்தில் நாம் வீசியிருக்க வேண்டிய முறையில் பந்துவீசவில்லை. குறிப்பாக மயங்க் யாதவ் அளவுக்கு அதிகமாக ஷார்ட் பால் பயன்படுத்திவிட்டார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய வாசிம் ஜாஃபர் “சஞ்சு சாம்சன் அபாரமாக பேட்டிங் செய்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் அவுட் ஆகிவிட்டார், இல்லையெனில் 50-55 ரன்கள் அடித்த பிறகு அவர் அவுட் ஆவது அரிது. பவர் பிளேவில் நமக்கு தேவையான மொமண்டம் சஞ்சு சாம்சன் மூலம் கிடைத்தது, ஆனால் அபிஷேக் சர்மா அதை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அபிஷேக் சர்மாவுக்கு பவர் பிளேவில் அதிக ஸ்டிரைக் வைத்திருக்கவே பிடிக்கும்” என்று கூறி இருக்கிறார்.