இந்திய அணி தற்போது இலங்கைக்கு வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.காயம் காரணமாக இந்த இரண்டு தொடர்களிலும் இருந்து இலங்கை நட்சத்திர வீரர் ஒருவர் வெளியேறி இருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலையில் இலங்கை அணி மிகச் சிறப்பாக செயல்படும் என பலரும் கூறியிருந்தார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டுக்கு நல்ல பவுலிங் யூனிட்டை வைத்திருந்த பொழுதும் கூட, சரியான திட்டங்கள் இல்லாத காரணத்தினால் இலங்கை அணி இரண்டாவது சுற்றுக்கும் முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.
இந்த தோல்வியின் எதிரொலியாக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த வனிந்து ஹசரங்கா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். தற்பொழுது மூத்த மற்றும் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சரித் அசலங்கா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் இடைக்கால பயிற்சியாளராக இலங்கை லெஜெண்ட் பேட்ஸ்மேன் சனத் ஜெயசூர்யா கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட இலங்கை அணியில் பவுலிங் யூனிட் மிகவும் பலமாக இருந்தது. சுழல் பந்துவீச்சுக்கு வனிந்து ஹசரங்கா மற்றும் மதிஷா தீக்ஷனா இருந்தார்கள். அதே சமயத்தில் வேகப்பந்து வீழ்ச்சிக்கு துஷ்மந்த சமீரா, மதிஷா பதிரனா மற்றும் நுவன் துஷாரா ஆகியோர் இருந்தார்கள். இந்த ஐவரும் களமிறங்கும் பொழுது இலங்கை அணியின் பலிங் யூனிட் மிகவும் பலமானதாக இருக்கும்.
இந்த நிலையில் தற்போதைய வீரர்களில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவராக 15 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரா தொடர் தொடங்க இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார். இது அந்த அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க : 3 வருஷ தேவை.. இந்த முறை இந்திய அணியை ஜெயிக்க முடியும்.. எல்லாமே எங்ககிட்ட இருக்கு – இலங்கை பதிரனா பேட்டி
உலகக் கிரிக்கெட்டில் காயத்தால் மிகவும் அவதிப்பட கூடிய வீரர்களில் தற்போது இவருக்குத்தான் முதலிடம் கொடுக்க முடியும். தொடர்ந்து ஒவ்வொரு தொடருக்கு இடம் பெறுவதும், பின்பு தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவோ அல்லது தொடரின் பாதிலோ காயத்தால் விலகுவதும் இவருக்கு வாடிக்கையாக மாறி வருகிறது. இந்திய அணிக்கு எதிராக சொந்த நாட்டில் சிறப்பாக செயல்பட்டு, புதிய ஆரம்பத்தை உண்டாக்க நினைத்த இலங்கை நிர்வாகத்திற்கு இது பெரிய ஏமாற்றமாகத் தற்பொழுது அமைந்திருக்கிறது!