இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இதில் பாகிஸ்தான் அணி ஒரு பந்து வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய அணி உடன் மோத இருக்கிறது.
இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் முதல் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இரண்டாவது அரையிறுதி போட்டி டம்புல்லாவில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீராங்கனை முபினா அலி அதிகபட்சமாக 37 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை பெரோசா 25 ரன்கள் குவித்தார். கேப்டன் நிடா தர் 23 ரன்களும் பாத்திமா 23 ரன்களும் குவித்தனர். பந்துவீச்சில் இலங்கை அணியின் பிரபோ தாணி இரண்டு விக்கட்டுகளும், கவிஷா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினார்கள்.
இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிஸ்மி டக் அவுட் ஆகி வெளியேற, மற்றொரு தொடக்க வீராங்கனை களத்தில் சமாரி அத்தபத்து நிலைத்து நின்றார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஓரளவு ரன்கள் குவித்து வந்த இலங்கை அணிக்கு பாகிஸ்தான் வீராங்கனைகள் சரியான நெருக்கடி கொடுத்தனர். இதனால் விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மட்டுமே ஆறுதல் அளித்தார்.
இருப்பினும் 19 வது ஓவரில் 13 ரன்களை பாகிஸ்தான் அணி விட்டுக் கொடுக்க, இறுதி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வீசிய நிடா தர் முதல் பந்தில் ரன் கொடுக்காமல் இரண்டாவது பந்தில் விக்கட்டும், மூன்றாவது பந்தில் ரன் கொடுக்காமலும் சிறப்பாக வீச, நான்காவது பந்தில் ஒரு ரன்னும் ஐந்தாவது பந்து வைடாக வீச போட்டி சமனில் இருந்தது. அப்போது அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க இலங்கை அணி ஒரு பந்தை மீதம் வைத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சிறப்பாக விளையாடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சமாரி 48 பந்துகளில் 63 ரன்கள் குவித்து இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இதையும் படிங்க:சச்சினின் உலக சாதனையை முறியடிப்பிங்களா?.. ஜோ ரூட் நேர்மையான பதில்.. இந்திய ரசிகர்கள் நெகிழ்ச்சி
இதனால் இலங்கை அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சிறப்பாக விளையாடிய சமாரி ஆட்ட நாயகி விருதை கைப்பற்ற, இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.