பட்டையை கிளப்பும் சவுத் ஆப்பிரிக்கா சூப்பர் கிங்ஸ்; இங்கிருந்து அங்கு தொடரும் விசில்!

0
4497
JSK

தென்னாப்பிரிக்காவில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஆறு அணிகளையும் இந்திய ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளன!

இன்று டர்பன் நகரை தலைமையாகக் கொண்டு விளையாடும் ஐபிஎல் லக்னோ அணியும், ஜோகனஸ்பர்க் நகரை தலைமையாக கொண்டு விளையாடும் ஐபிஎல் சென்னை அணியும் டர்பன் மைதானத்தில் மோதின.

முதலில் டாசில் வென்ற சென்னை அணியின் கேப்டன் டியூ பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் ஆடுகளம் மிகவும் மெதுவாக இருக்க முதல் நான்கு விக்கெட்டுகளை 27 ரன்களுக்குள் சூப்பர் கிங்ஸ் அணி இழந்துவிட்டது.

இதற்கு அடுத்து கேப்டன் டியூ பிளசிஸ் மற்றும் டோனவன் பெரிரா இருவரும் சேர்ந்து அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். பெரிரா பத்தாவது ஓவரில் ஆரம்பித்த அதிரடியை இருபதாவது ஓவரின் முடிவின் வரை நிறுத்த வில்லை.

தொடர்ந்து விளையாடிய அணியின் கேப்டன் டியூ பிளசிஸ் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடிய டோனவன் பெரிரா 40 பந்துகளில் ஐந்து சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 82 ரன்கள் குவித்தார். ரோமரியோ செப்பர்டு அதிரடியாக 20 பந்துகளில் 40 ரன்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் குவித்து ஆட்டம் இழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய டோனவன் பெரிரா கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தென் ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டே அங்கு ஒரு அலுவலகத்தில் அக்கவுண்டாக வேலை பார்த்தவர். இவரது திறமையை மிகச் சரியாகக் கண்டறிந்து ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே சொல்லி எடுத்து இன்று சாதித்துள்ளது!