7 போர் 10 சிக்ஸ் 117 ரன்.. ரீசா ஹென்றிக்ஸ் அபார ஆட்டம்.. பாகிஸ்தானை வீழ்த்தி 2வது டி20யில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

0
538

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிற நிலையில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்றிக்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் இரண்டாவது டி20 போட்டி

இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. கேப்டன் ரிஸ்வான் 11 ரன்னில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க வரிசை பேட்ஸ்மேன் அய்யூப் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 98 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இதில் பாபர் அசாம் 31 ரன்கள், இர்ஃபான்கான் 30 ரன்கள் அதிரடியாக குவித்தனர். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஹென்றிக்ஸ் ஒரு முனையில் அதிரடியாக விளையாட தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தது. அதற்குப் பிறகு மிடில் வரிசை பேட்ஸ்மேன் வாண்டர்டுசன் உடன் கைகோர்த்து ஹென்றிக்ஸ் அதிரடியாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியின் ரன்களை வெகுவாக உயர்த்தினார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய ஹென்றிக்ஸ்

63 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் ஏழு பவுண்டரி 10 சிக்ஸர் என 185.71 ஸ்ட்ரைக்ரேட்டில் அபாரமாக விளையாடினார். சிறப்பாக விளையாடி 117 ரன்கள் குவித்த நிலையில் அப்பாஸ் அப்ரிடியின் பந்துவீச்சில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய வாண்டெர் டுசன் 38 பந்துகளை எதிர்கொண்டு மூன்று பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 66 ரன்கள் குவித்து இந்த இருவரும் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதையும் படிங்க:2வது போட்டியில் தோற்றும்.. ரோஹித் பயிற்சியை ரத்து செய்ய காரணம் இதுதான் – சுப்மான் கில் பேட்டி

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 19.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்து இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றது. முதல் போட்டியிலும் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹென்றிக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -