இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட தென் ஆப்பிரிக்க அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட சென்றிருக்கிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.
சரிந்து விழுந்த இந்திய பேட்டிங் யூனிட்
இந்த போட்டிக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு கடந்த போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார். அடுத்து அபிஷேக் ஷர்மா 4, சூரியகுமார் யாதவ் 4, திலக் வர்மா 20, அக்சர் படேல் 27 தங்கள் எடுத்து வரிசையாக வெளியேறினார்கள்.
இந்த நிலையில் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பொறுமையாக விளையாடிய ஹர்திக் பாண்டியா இறுதி வரை ஆட்டம் இழக்காமல் நின்று 45 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் யான்சன், கோட்சி, பீட்டர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
கேப்டன் சூரியகுமாரின் தவறான முடிவு
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு வருண் சக்கரவர்த்தி பெரிய செக் வைத்தார். ரிசா ஹென்றிக்ஸ் 24, மார்கரம் 3, மார்க்கோ யான்சன் 7, கிளாசன் 2, டேவிட் மில்லர் 0 என ஐந்து பேட்ஸ்மேன்களை வரிசையாக வருண் சக்கரவர்த்தி வெளியேற்றினார்.
இதைத் தொடர்ந்து மூன்று விக்கெட் கைவசம் இருக்க நான்கு ஓவர்களில் 37 ரன்கள் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு தேவைப்பட்டது. 17ஆவது ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் 12 ரன் கொடுத்தார். 18வது ஓவரை வீசிய ஆவேஸ் கான் 12 ரன் கொடுத்தார். 19வது ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் 16 ரன்கள் கொடுக்க தென் ஆப்பிரிக்க அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : சதம் அடித்த 48 மணி நேரத்தில்.. சாம்சன் படைத்த மோசமான சாதனை.. ரோஹித் கோலியை முந்தினார்
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க பக்கத்தில் இரண்டு ரைட் ஹாண்ட் பேட்ஸ்மேன்கள் இருந்த பொழுது, கிளாசன் மில்லர் அவுட் ஆகி இருந்த நேரத்தில், கேப்டன் சூரியகுமார் யாதவ் பதினைந்தாவது ஓவரை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்காமல்,, அக்சர் படேல் இடம் கொடுத்திருக்கலாம். ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. மேலும் அக்சர் படேல் தனது முதல் ஓவரில் இரண்டு ரன் மட்டுமே கொடுத்திருந்தார். சூரியகுமார் எடுத்த ஒரு தவறான முடிவு, வருண் சக்கரவர்த்தியின் ஐந்து விக்கெட்டை வீணடித்து விட்டது!