தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் அபுதாபியில் வைத்து மோதிக் கொள்கின்றன. இதில் முதலில் நடைபெறும் முதல் டி20 போட்டியில்தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் விளையாடிமுடித்தது. இதைத்தொடர்ந்து தற்போது அபுதாபியில் 2 டி20 போட்டி கொண்ட தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது.
அயர்லாந்து அபாரம்
இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக ரன்கள் குவித்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது.
அயர்லாந்து அணியின் தரப்பில் அதிகபட்சமாக கர்டிஸ் கேம்பர் 49, நீல் ராக் 37, டக்ரோல் 21 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க தரப்பில் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் பேட்டரிக க்ரூகர் 4 ஓவர் பந்துவீசி, 1 மெய்டன் செய்து 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
ரிக்கி ரிக்கெல்டன் அதிரடி
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 79 பந்துகளில் 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரீஸா ஹென்றிக்ஸ் 33 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 51 ரன்கள் எடுத்தார். சவுத் ஆப்பிரிக்கா டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ரிக்கி ரிக்கெல்டன் 48 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 76 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க : தோனியாய் மாறிய ரிஷப் பண்ட்.. அஸ்வினுக்கே ஐடியா கொடுத்து விக்கெட் எடுத்த மாஸ் சம்பவம் – களத்தில் என்ன நடந்தது?
இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றி மிக எளிதாக அமைந்தது. பிரீட்ஸ்கி 19, கேப்டன் மார்க்ரம் 17 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க, தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 17.4 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி இழந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.