தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சுற்றுப்பயணம் விராட் கோலிக்கு எப்பொழுதும், தனித்துவம் வாய்ந்த ஒன்றாகவே மறக்க முடியாததாகவே இருந்து வருகிறது.
விராட் கோலி முழு நேர கேப்டனாக மாறிய பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சென்றார். இதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு சென்ற டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் கேப்டனாக இருந்தார். அந்தத் தொடரில் ஏற்பட்ட தோல்வியுடன் அவர் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்டார்
மேலும் கடந்த முறை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த பொழுது, தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கருக்கு பேடில் பட்ட பந்து, ரிவியூவில் திரும்ப பார்க்கும் பொழுது, ஸ்டெம்பை தாக்காமல் உயரமாக சென்றது எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனென்றால் குறிப்பிட்ட இடத்தில் விழுந்த பந்து ஸ்டெம்ப்பை தாக்காமல் செல்வதற்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது.
இது அப்பொழுது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் கேப்டன் விராட் கோலி கடுமையான கோபத்தில் இருந்தார். நேராக ஸ்டெம்ப் மைக்கில் சென்று சில வார்த்தைகளை பதிவு செய்யவும் செய்தார். டிஆர்எஸ் முறையை கவனிக்கும் தென்னாபிரிக்க உள்நாட்டு தொலைக்காட்சி நிறுவனம், அந்த நாட்டிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டப்பட்டது. மேலும் இந்திய அணி தொடரை இழந்ததால் இது விராட் கோலியை மேலும் மேலும் கோபப்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் “விராட் கோலி தனது சில சொந்த விஷயங்களுக்காக தென் ஆப்பிரிக்காவில் இந்த முறை தீயாக இருக்கப் போகிறார். தென் ஆப்பிரிக்க கடைசி தொடரில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. மேலும் சமீபத்தில் டெஸ்ட் ரன்களுக்கு அவர் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. விராட் கோலி தீயாக இருந்தால் அணியும் அப்படியே இருக்கும். டேவிட் வார்னர் இருந்தால் ஆஸ்திரேலியா இருப்பது போல.
ஆனாலும் டிஆர்எஸ் முறையில் கடந்த முறை ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த முறை செல்லும் இந்திய அணி எந்த எதிர்வினையும் செய்யாது. ஏனென்றால் இந்த இந்திய அணிக்கு தற்பொழுது ரோகித் சர்மா கேப்டனாக இருக்கிறார். கடந்த முறைபோல் ஆக்ரோஷமாக இந்த விஷயங்களுக்கு இந்திய அணி நிற்காது.
ரோகித் சர்மாவின் தலைமையின் கீழான இந்திய அணி வித்தியாசமான மனநிலையை கொண்டு இருக்கிறது. அவர்கள் வித்தியாசமாக விளையாடுகிறார்கள். ஒரு கேப்டன்தான் ஒரு அணிக்கு கலாச்சாரத்தை உருவாக்குகிறார். எனவே விராட் கோலி செய்தது போல இந்த முறை இருக்காது!” என்று கூறி இருக்கிறார்!