சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக தென்னாபிரிக்க அணி உள்ளது.
இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து தனது பார்வையை பிரதிபலித்திருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் அணி மற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள நாடுகளாக இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கருதப்படுகின்றன. சமீபகாலமாக சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணியின் பங்கு மிக முக்கியமாக உள்ளது.
கடந்த ஒரு நாள் உலக கோப்பையில் அரை இறுதி வரை முன்னேறிய தென்னாப்பிரிக்க அணி, கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் நூலிழையில் வெற்றியை தவற விட்டது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா சாம்பியன்ஸ் டிராபி குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
உலகக் கோப்பையை விட இது சவாலானது
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “உலகக் கோப்பையில் நீங்கள் கணக்கெடுத்து முன்னேறுவதற்கு நேரம் இருக்கிறது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அப்படி இல்லை. கணக்கிடுவதற்கு நேரமே இருக்காது. ஆனால் நாங்கள் இந்த தொடரில் ஒரு படி மேலே செல்வோம் என்பதில் நம்பிக்கை உள்ளது. இந்த முறை சாம்பியன் டிராபி தொடரில் நாங்கள் எங்கு இருக்க விரும்புகிறோம் என்கிற தெளிவான பார்வை உள்ளது.
இதையும் படிங்க:1 போட்டி.. 2 மெகா சாதனை.. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளிய ரோஹித்.. இங்கி 2வது ODI
ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பையை பார்க்கும் போது இந்த வடிவம் அணிகளுக்கு மிகவும் சவாலாக உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் டி20 லீக் என சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள் அணிக்கு என்ன மதிப்பு சேர்க்க முடியும் என்பதை தெரிவிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகும். மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது” என பவுமா கூறி இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி வருகிற 19ஆம் தேதி முதல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.