நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆன்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அமெரிக்கா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. பரபரப்பான இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க ஆட்டக்கார ரீசா ஹென்றிக்ஸ் 11 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் மார்க்ரம் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார்கள்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி அதிரடியாக 60 பந்துகளில் 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. குயின்டன் டி காக் 40 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்து எய்ட்ன் மார்க்ரம் 32 பந்தில் 46 ரன், ஹென்றி கிளாசன் 22 பந்தில் 36* ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 16 பந்துகளில் 20* ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. அமெரிக்கா தரப்பில் நெட்ரவால்கர் மற்றும் ஹர்மித் சிங் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஸ்டீவன் டெய்லர் 14 பந்தில் 24 ரன்கள், நிதீஷ் குமார் 6 பந்தில் 8 ரன், நட்சத்திர வீரர் ஆரோன் ஜோன்ஸ் 5 பந்தில் 0 ரன், கோரி ஆண்டர்சன் 12 பந்தில் 12 ரன், சயான் ஜகாங்கீர் 9 பந்தில் 3 ரன் எடுத்து வரிசையாக ஆட்டம் இழந்தார்கள்.
அமெரிக்கா அணி 76 ரன்களுக்கு ஐந்து விக்கட்டுகளை இழந்த நிலையில், ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய துவக்க ஆட்டக்காரர் ஆன்ட்ரிஸ் கவுஸ் உடன் ஹர்மீத் சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி கடைசி இரண்டு ஓவர்களுக்கு 28 ரன்கள் தேவை என்கிற நிலைக்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில் ரபடா வீசிய 19 ஆவது ஓவரில் ஹர்மீத் சிங் 22 பந்தில் 38 ரன்கள் எடுத்து முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 43 பந்தில் 91 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அந்த ஓவரில் ரபாடா இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தார். போட்டி இந்த இடத்தில் மொத்தமாக தென் ஆப்பிரிக்கா பக்கம் வந்தது.
இதையும் படிங்க : 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 20 ஓவர்களில் அமெரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமெரிக்க தரப்பில் இறுதிவரை ஆட்டம் இழக்காத ஆன்ட்ரிஸ் கவுஸ் 47 பந்தில் 80 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 4 ஓவர்களுக்கு 18 ரன்கள் மட்டுமே தந்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரே அதிர்ச்சி தோல்வியிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியை கடைசியில் காப்பாற்றினார்.






