ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த லிஸ்ட் ஏ தொடரில் மும்பையைச் சேர்ந்த சீம் பௌலிங் ஆல்ரவுண்டர் சூரியான்ஷ் ஷெட்ஜே பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் மிகச் சிறந்த ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்தி அசத்தினார். இதன் காரணமாக நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் அணியில் அவர் முதல்முறையாக தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ள ஒருநாள் தொடரைக் கருத்தில் கொண்டும், டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் தயாரிப்புகளை சமநிலைப்படுத்தவும் சூரியான்ஷ் ஷெட்ஜே ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் என்று தேர்வுத் குழு கருதுகிறது. மேலும் நிதிஷ் குமார் ரெட்டியின் டெஸ்ட் போட்டிகளுக்கான வாய்ப்பு மற்றும் ஹார்திக் பாண்டியாவின் நீண்ட நாள் போட்டி ஓய்வு போன்ற காரணங்களால் ஷெட்ஜேவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க பிரகாசமான வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியா ஏ தொடரில் சூரியான்ஷ் ஷெட்ஜேவின் ஆல்ரவுண்ட் ஆட்டம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் “சூரியான்ஷ் ஷெட்ஜே ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில் தனது பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் மற்றொரு போட்டியில் 66 ரன்கள் அடித்து அசத்தினார்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அந்த அதிகாரி “இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டையும் அடுத்தடுத்து விளையாட உள்ளதால், அணிக்கு கூடுதல் ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார். சூரியான்ஷ் ஷெட்ஜேவின் சீம் பௌலிங் மற்றும் அதிரடி பேட்டிங் ஸ்கில்-செட் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பதால் தேர்வுக்குழு அவர் பெயரை தீவிரமாக பரிசீலித்து வருகிறது” என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் பேசிய அவர் “நவம்பர் 10 அன்று நடைபெறும் 3வது ஒருநாள் போட்டி முடிந்தவுடன் கேப்டன் சுப்மன் கில் ரெட் பால் கிரிக்கெட் பயிற்சிகளில் கவனம் செலுத்தக்கூடும். எனவே நடுவரிசையில் விளையாடும் ஆல்ரவுண்டர் இடத்திற்கு சூரியான்ஷ் ஷெட்ஜே மிகவும் பொருத்தமான வீரராக இருப்பார் என்று நம்பப்படுகிறது” என்று கூறி முடித்து இருக்கிறார்.






