4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி

0
157
Smriti

தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இன்று நடைபெற்ற தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் சேர்ந்து 136 பந்துகளில் 171 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஸ்மிருதி மந்தனா 120 பந்துகளில் 136 ரன்கள், ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் இழக்காமல் 88 பந்துகளில் 103 ரன் குவித்தார்கள். இந்திய அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 325 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 67 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் வோல்வார்ட் மற்றும் மரிசானா கேம்ப் இருவரும் பொறுப்பாகவும் அதே சமயத்தில் அதிரடியாகவும் விளையாடினார்கள்.

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 170 பந்துகளில் 184 ரன்கள் குவித்தது. மரிசானா கேம்ப் 94 பந்துகளில் 114 ரன்கள் குவித்தார். 49 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணிக்கு கடைசி ஓவரின் 6 பந்துகளில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

இந்தியாவிற்கு கடைசி ஓவரை பூஜா வஸ்ட்ரேகர் வீசினார். ஆட்டம் இழக்காமல் இருந்த கேப்டன் வோல்வார்ட் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தை சந்தித்த நடின் டி க்ளேர்க் பவுண்டரி அடித்தார். இதனால் 4 பந்தில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அவர் மூன்றாவது பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : எங்க 2 பேட்ஸ்மேன்.. கோலிக்கு இந்த பிரச்சனையை உண்டாக்கிட்டாங்க.. தப்பிக்க முடியாது – மேத்யூ ஹைடன் பேச்சு

நான்காவது பந்தை சந்தித்த சன்கேஸ் ரன் எடுக்காமல் கோல்டன் டக் ஆனார். இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் பைஸ் வகையில் ஒரு ரன் கிடைக்க, பேட்டிங் முனைக்கு வந்த கேப்டன் வோல்வார்ட் கடைசிப் பந்தில் ரன் எடுக்காமல் போக, இந்தியா பரபரப்பான போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வோல்வார்ட் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 135 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் தீப்தி சர்மா மற்றும் பூஜா வஸ்ட்ரேகர் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.