இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. இந்த நிலையில் பரபரப்பாக நடந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் வந்தது. ரீஸா ஹென்றிக்ஸ் 25 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய குயிண்டன் டி காக் 38 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இவர்களுக்கு அடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு டேவிட் மில்லர் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி கடைசி பத்து ஓவர்களில் மிகவும் தடுமாறியது. இறுதியாக 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் 61 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் இருவரும் பொறுமையாக விளையாடி விக்கெட் இழக்காமல் அணியை 15 ஓவருக்கு கொண்டு வந்தார்கள்.
இதற்கு அடுத்து இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது. 17ஆவது ஓவரை வீசிய ஒட்டினியல் பார்ட்மேன் மொத்தம் ஐந்து புல்டாஸ் பந்துகளை வீசி 21 ரன்கள் தந்து இங்கிலாந்து பக்கம் போட்டியை மாற்றினார். இந்த நிலையில் 42 பந்தில் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த லியாம் லிவிங்ஸ்டன் 17 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : கம்பீர் இருக்கட்டும்.. லக்ஷ்மணனை கூட்டிட்டு வாங்க.. பிசிசிஐ திட்டத்தில் புதிய திருப்பம்.. வெளியான தகவல்கள்
கடைசி இரண்டு ஓவர்களுக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19ஆவது ஓவரில் ஏழு ரன்கள் மட்டுமே மார்க்கோ யான்சன் கொடுத்தார். நோர்க்கியா வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் ஹாரி புரூக் 37 பந்தில் 53 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஐந்து பந்துகளில் ஆறு ரன்கள் மட்டுமே வர, 7 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.






