சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இதில் சிறப்பாக விளையாடிய தென்னாபிரிக்க அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி மெகா வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் டிராபி
கராச்சியில் நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜார்ஜி 11 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் ரிக்கல்டன் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மறுமுனையில் கேப்டன் பவுமா அவரோடு சிறந்த பார்ட்னர்ஷிப் அமைக்க இந்த இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 142 பந்துகளில் 129 ரன்கள் குவித்தார்கள். அதற்குப் பிறகு பௌவுமா 58 ரன்னில் வெளியேற, கேப்டன் வாண்டர் டசன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வாண்டர் டசன் 46 பந்துகளில் 52 ரன்கள் குவித்து வெளியேற, மறுமுனையில் ரிக்கல்ட்டன் 106 பந்துகளில் 103 ரன்கள் குறித்து அபார சதத்தை வெளிப்படுத்தினார். பின்னர் இறுதிக்கட்டத்தில் மார்க்ரம் 36 பந்துகளில் 52 ரன்கள் குவிக்க தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் நபி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
தென்னாப்பிரிக்க அணி சிறப்பான வெற்றி
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் குர்பாஸ் 10 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் இப்ராகிம் 17 ரன்னில் நடையை கட்டினார். மிடில் வரிசையில் ரஹமத்ஷா நிலைத்து நின்ற பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் மற்ற ஆப்கானிஸ்தான் வீரர்கள் அவருக்கு சரியான ஒத்துழைப்பு தருவதற்கு மறுத்தனர்.
இதையும் படிங்க:4 மேட்ச் வின்னர்ஸ் இல்ல.. அதனால எங்க ஆட்டம் இனி இப்படித்தான் இருக்கும்.. திட்டத்தை ஓபன் ஆக அறிவித்த ஆஸி ஸ்மித்
கேப்டன் சாகிதி டக் அவுட் ஆகி வெளியேற, அஹ்மதுல்லா 18 ரன், நபி 8 ரன், ரஷித் கான் 18 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, அதற்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் அணி எஞ்சிய விக்கட்டுகளையும் இழந்ததால் 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்து 107 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதில் ரஹ்மத் மட்டும் 90 ரன்கள் குவித்தார். பந்துவீச்சை பொறுத்தவரை ரபாடா 3 விக்கட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக தென்னாப்பிரிக்க அணி முதல் போட்டியிலேயே சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது






