சூரியகுமார் யாதவ் டி20 போட்டிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார் மொயின் அலி.
நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடர் சூரியகுமார் யாதவிற்கு இதுவரை சிறப்பாக அமைந்திருக்கிறது. மூன்று அரை சதங்கள் உட்பட ஐந்து போட்டிகளில் 225 ரன்கள் அடித்து, 75 ரன்கள் சராசரியாக கொண்டிருக்கிறார். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 180 க்கும் அதிகமாக இருக்கிறது.
நெதர்லாந்து அணிக்கு எதிராக 51 ரன்கள் 25 பந்துகளில் அடித்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 68 ரன்கள் 40 பந்துகளில் அடித்தார். அடுத்ததாக ஜிம்பாப்வே அணியுடன் 25 பந்துகளில் 61 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இந்த 2022 ஆம் ஆண்டு சூரியகுமார் யாதவிற்கு ஒரு கனவு ஆண்டாக அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 30 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்து இருக்கிறார்.
ஒரு ஆண்டில் டி20 போட்டிகளில் மட்டுமே ஆயிரம் ரன்களை கடந்த ஒரே இந்தியர் மற்றும் இரண்டாவது சர்வதேச வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் சூரியகுமார் யாதவ். தொடர்ச்சியான பங்களிப்பால் தற்போது டி20 தரவரிசை பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார்.
நடைபெற்று வரும் இந்த உலக கோப்பை தொடரில் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கிய வீரர் இவர் ஆவார். இங்கிலாந்து அணி இவரை எப்படி பார்க்கிறது இவருக்கு எந்த மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கிறது என்று பேட்டியளித்திருக்கிறார் மொயின் அலி.
“மிகச் சிறந்த வீரர். டி20யில் முதலிடத்திற்கு மிகத் தகுதியான வீரர். டி20 போட்டிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.
இவர் சிறப்பான ஃபார்மில் இருக்கும் பொழுது, எந்தப் பகுதியிலும் இவருக்கு பந்துவீச முடியாது. அப்படிப்பட்ட ஒரே வீரர் இவர். ஏனெனில் அப்படி ஒரு தருணத்தில் இவருக்கு பலவீனம் என்பதே இல்லாமல் போய்விடும்.” என்றார்.
கடைசியாக இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டியில், சூரியகுமார் யாதவ் 55 பந்துகளுக்கு 117 ரன்கள் அடித்து மொயின் அலி பந்தில் ஆட்டம் இழந்தார். அதைப்பற்றி பேசிய மொயின் அலி கூறுகையில்,
“அப்போட்டியில் எங்களை கொலையே செய்து விட்டார் என்று கூறலாம். ஏனெனில் அத்தனையும் அடித்து முடித்த பிறகு தான் அவர் ஆட்டம் இழந்தார். இது போலத்தான் அவரது சிறப்பான ஆட்டம் இருக்கும். அவரே சோர்வடைந்து அவுட் ஆனால் மட்டுமே விக்கெட் எடுக்க முடியும். அப்படிப்பட்ட வீரர் சூரியகுமார் யாதவ். எங்களிடம் அவருக்கென்று திட்டம் எதுவும் இல்லை. சரியான லைன் மற்றும் லென்த் இரண்டிலும் வீசுவதற்கு முயற்சிப்போம்.” என்றார்.