சிக்கந்தர் ராசா மிரட்டலடி பர்ஃபார்மன்ஸ்… வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வியால் ஜிம்பாப்வே சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேற்றம்!

0
3276

உலகக்கோப்பை குவாலிபயர் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது ஜிம்பாப்வே.

ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை குவாலிஃபயர் லீக் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா நான்கு புள்ளிகளுடன் வலுவான நிலையில் இருந்தன.

- Advertisement -

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். கேப்டன் எர்வின் 47 ரன்கள் அடித்து அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் ஜாய்லார்ட் 26 ரன்கள் அடித்து வெளியேறினார்.

மிடில் ஆர்டரில் ரியான் பர்ல் மற்றும் சிக்கந்தர் ராசா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தது ஜிம்பாப்வே அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதில் ரியான் பர்ல் 50 ரன்கள் அடுத்து அவுட் ஆனார். சிக்கந்தர் ராசா இரண்டு சிக்ஸர்கள் ஆறு பவுண்டரிகள் உட்பட 68 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 49.5 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 268 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது.

இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் கைல் மேயர்ஸ் 56 ரன்கள் அடித்துக் கொடுத்து நம்பிக்கையை அளித்தார். கடந்த போட்டியில் சதம் அடித்த சாய் ஹோப் மற்றும் நிக்கோலஸ் பூரான் இருவரும் இந்த முறை 30 மற்றும் 34 ரன்கள் அடித்து அவுட் ஆகினர்.

- Advertisement -

பின்னர் போராடிய ராஸ்டன் சேஸ்(44) மற்றும் ஜேசன் ஹோல்டர்(19) இருவரும் கடைசிவரை எடுத்துச்சென்று வெற்றி பெறவைக்க முடியவில்லை. இருவரும் ஆட்டம் இழந்த பின்னர், அடுத்து வந்தவர்கள் எவரும் பெரிதளவில் சோபிக்கவில்லை.

இதனால் 44.4 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட் ஆனது. இறுதியில் 233 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஜிம்பாப்வே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. சிக்கந்தர் ராசா மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார்.