ஆர்சிபி பிளே-ஆப் கனவை.. சதம் அடித்து தகர்த்த சுப்மன் கில்! விராட் கோலியின் சதம் வீண்.. குஜராத் அபார வெற்றி!

0
1082

கடைசி ஓவர் வரை நின்று சதம் அடித்துக்கொடுத்து குஜராத் அணியை வெற்றிபெறச் செய்தார் சுப்மன் கில். இந்த தோல்வியின் மூலம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் வெளியேறியது ஆர்சிபி அணி.

வாழ்வா? சாவா? போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி லீக் போட்டியை விளையாடிய ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். டு பிளசிஸ் 28 ரன்கள், பிரேஸ்வெல் 26 ரன்கள் மற்றும் அனுஜ் ராவத் 23 ரன்கள் அடித்துக்கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.

- Advertisement -

இந்த இலக்கை கட்டுப்படுத்தினால் பிளே-ஆப் சுற்றுக்குள் செல்லலாம் என்கிற கனவோடு பந்துவீச்சை துவங்கியது ஆர்சிபி அணி. குஜராத் அணிக்கு விருதிமன் சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் ஓபனிங் இறங்கினர்.

சகா 12 ரன்கள் மட்டுமே அடித்து அவுட் ஆனார். அடுத்து உள்ளே வந்த விஜய் சங்கர் சுப்மன் கில் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்களை பந்தாடினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தது.

விஜய் சங்கர் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் உட்பட 35 பந்துகளில் 53 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். சனக்கா(0), மில்லர்(6) இருவரும் சொற்பரன்களுக்கு வெளியேறியதால் ஆர்சிபி அணிக்கு சிறிதளவில் நம்பிக்கை பிறந்தது.

- Advertisement -

கடைசி ஐந்து ஓவர்களில் ஆர்சிபி அணி 50 ரன்கள் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் களத்தில் மிகச்சிறந்த பார்மில் இருக்கும் சுப்மன் கில் இருந்தார். இவர் கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்று சிக்சர் அடித்து பினிஷ் செய்தார். 19.1 ஓவர்களில் இலக்கை எட்டிய குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றைவிட்டு வெளியேறியது. நேரடியாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆப் இடத்தை உறுதிசெய்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற சுப்மன் கில் 8 சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகள் உட்பட 52 பந்துகளில் 104 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். இன்ஷா சீசனில் இவர் அடிக்கும் 2ஆவது சதம் இதுவாகும்.