இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி, கடந்த முறையை விட இந்த முறை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான வீரர்களை தேர்வு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில், தனது சிறுவயதில் ஐபிஎல் அனுபவம் குறித்த சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்து அணியை வழி நடத்தினார். ஒருமுறை சாம்பியன் பட்டத்தையும், ஒருமுறை இறுதி போட்டியையும் குஜராத் அணிக்கு அழைத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி அங்கு கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதனால் அவருக்குப் பிறகு அந்த அணியின் நட்சத்திர வீரரான சுப்மான் கில் குஜராத் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
ஆனால் கடந்த ஆண்டு குஜராத் அணி பிளே ஆப் சுற்றை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு ஜாஸ் பட்லர், ரபாடா போன்ற நட்சத்திர வீரர்களை அணியில் வாங்கி வலுவாக கட்டமைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் கில் தனது சிறு வயதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி அமர்வில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசியதாகவும், அவரோடு எடுத்த போட்டோக்கள் இன்னும் தன்னுடன் பத்திரமாக இருப்பதாக சில சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து கில் விரிவாக கூறும்போது ” பஞ்ச்குலாவில் உள்ள தௌதேவி லால் மைதானத்தில் என் தந்தையோடு மூன்று முதல் நான்கு போட்டிகளில் கலந்து கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. ஐபிஎல் தொடரின் இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சிக்காக அங்கு வந்தது. அப்போது எனக்கு 9 அல்லது 10 வயது இருக்கும். சச்சின் சார் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல்லுடன் கூட எடுத்துக் கொண்ட புகைப்படம் கூட என்னிடம் இருக்கிறது. அவர்கள் பயிற்சி செய்யும் போது நான் பந்துகளை அவர்களுக்கு வீசிக் கொண்டிருந்தேன்.
இதையும் படிங்க:வேற டீம்ல இருந்தாலும் அவர் மனசு இங்கதான் இருக்கு.. இதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும் – கேகேஆர் சுனில் நரேன்
ஐபிஎல் குறித்த எனது ஆரம்பகால நினைவுகள் இவை. நான் அப்போது பதட்டமாக இருந்தேன், சச்சின் அய்யாவை பற்றி எனக்கு முன்பே நன்றாக தெரியும். நான் கிரிக்கெட் விளையாட தொடங்கியதற்கு அவர்தான் காரணம். என் அப்பா சச்சின் அய்யாவின் மிகப்பெரிய ரசிகர். எனது அப்பாவிற்கு போஸ்டர்கள் மீது பெரிய ஆர்வம் இல்லை என்றாலும், எங்கள் கிராமத்தில் சச்சின் போஸ்டர்கள் தான் அதிகமாக இருக்கும்” என்று கில் பேசியிருக்கிறார்.