நேற்று நடைபெற்ற போட்டியில் பனிப்பொழிவின் தாக்கம், பந்துவீச்சாளர்களின் செயல்பாடு மற்றும் வீரர்களின் சிறந்த ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மிக முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த போட்டியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் மற்றும் மயங்க் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் எதிரணியினர் அபாரமாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றனர் என்று கூறி அவர்களின் சிறப்பான ஆட்டத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “எவ்வளவு ரன்கள் அடித்தால் வெற்றிக்கு போதுமானது என்று கேட்டால், நேர்மையாகச் சொன்னால் அதற்கென ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைச் சொல்ல முடியாது, ஏனென்றால் டியூ பேக்டர் வரும்போது அது மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. 249 ரன்கள் அடித்தாலும் கூட, இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும்போதே அதை சேஸ் செய்து விடுகிறார்கள். அதனால் இந்த இலக்கை அடைய முயல்வோம் என்று எந்த ஒரு ரன் எண்ணிக்கையையும் முன்கூட்டியே கணிக்க முடியாது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “இந்த விக்கெட்டில் பிழைக்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருந்தது, நீங்கள் செயல்படுத்தத் தவறும் எந்தப் பந்தும் ஸ்டாண்ட்ஸிற்குச் சென்று கொண்டிருந்தது, அவர்கள் எவ்வளவு சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதனால் ஆங்காங்கே சில தவறவிட்ட வாய்ப்புகள் இருந்தன, ஆனால் அது ஆட்டத்தின் ஒரு அங்கமாகும். ஆனால் பாராட்டுக்குரிய இடத்தில் பாராட்டித்தானே ஆக வேண்டும், அவர்கள் அற்புதமாக பேட்டிங் செய்தார்கள், அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் “இருவரும் தங்கள் துறைகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர், சஞ்சு மற்றும் அபிஷேக்கிடமிருந்து நாங்கள் அவ்வப்போது எதிர்பார்ப்பது இதைத்தான். அவர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, அந்தப் பொறுப்பை ஏற்று நமக்கு வேகத்தை அமைத்துத் தரும் விதம் மிகவும் சிறப்பானது. சஞ்சு மற்றும் அபிஷேக்கின் விதிவிலக்கான செயல்பாடுகள் மற்றும் மயங்கின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. அந்த மூன்று முக்கிய விக்கெட்டுகள் நமக்கு முன்னதாகவே ஆட்டத்தின் ரிதத்தை நிலைப்படுத்தியது, ஆனால் அதற்குப் பிறகு, அவர்களின் பார்ட்னர்ஷிப் உள்ளே வந்தது, மேலும் மோமெண்டம் அவர்கள் பக்கம் மாறியது” என்று கூறி முடித்தார்.