ராஞ்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் 250 ரன்கள் இலக்கை தற்காத்துக் கொள்ள முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், பனிப்பொழிவு காரணமாக பாதிக்கப்பட்ட இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாகவும், பேட் மற்றும் பாலுக்கு இடையே சமமான போட்டி இருக்க வேண்டும் என்பது குறித்தும் இந்திய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
இதுகுறித்து கௌதம் கம்பீர் பேசும்போது “பேட்டிற்கும் பாலிற்கும் இடையே சிறந்த போட்டி இருக்க வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள்? நிச்சயமாக, நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதை நாங்களும் விரும்புகிறோம். நீங்கள் சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்கள் மட்டுமே பார்க்க விரும்பினால், அதை நாங்களும் பார்க்க விரும்புகிறோம். ஆனால் ஒரு சமமான போட்டி வேண்டும் என்றால், நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம், ஏனென்றால் பந்துவீச்சாளர்களும் நம்முடைய பந்துவீச்சாளர்கள் தானே? அவர்கள் வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் அல்ல; அவர்களின் கரியரும் ஆபத்தில் உள்ளது. இந்த டிரஸ்ஸிங் ரூமில் உட்காருவதற்காக அவர்களும் கடினமாக உழைத்திருக்கிறார்கள்; அவர்கள் உழைக்கவில்லை என்று இல்லை. அவர்களும் உழைத்திருக்கிறார்கள். எனவே ஒரு சமமான போட்டி இருந்தால் நன்றாக இருக்கும், மேலும் சிறந்த கிரிக்கெட் பார்க்கப்படும்.” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “நாம் ஒரு வேர்ல்ட் சேம்பியன் அணி, அதனால் நாம் தொடர்ந்து முன்னேற விரும்புகிறோம். நிச்சயமாக, இவை பந்துவீச்சு செய்ய கடினமான சூழ்நிலைகள் என்பது நமக்குத் தெரியும்; தட்டையான விக்கெட்டுகள், பனிப்பொழிவுடன் பந்துவீசுவது கடினம், ஆனால் எதிரணியை எவ்வாறு தடுப்பது என்பதை நாம் கண்டறிய வேண்டும், குறிப்பாக அவர்கள் முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளையும், முதல் ஆறு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளையும் இழந்தபோது.” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் “நிச்சயமாக, இது கடினமாக இருந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும், ஷாய் ஹோப் பேட்டிங் செய்த விதம் அற்புதம். இந்த ஃபார்மட்டில் அவர்கள் உலகத் தரம் வாய்ந்த பேட்டர்கள் என்பது நமக்குத் தெரியும், அதனால் நிச்சயமாக இது கடினமாக இருந்தது.” என்று கூறி இருக்கிறார்.
இறுதியாக அவர் முடிக்கும்போது “ஆனால் நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம். பாட்டம் லைன் என்னவென்றால், எங்களால் 250 ரன்களை டிஃபென்ட் செய்ய முடியவில்லை. அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அவர்கள் வெற்றி பெறத் தகுதியானவர்கள், மேலும் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஆபத்தான அணிகளுக்கு எதிராக விளையாடும்போது, குறிப்பாக டாஸ் தோற்கும்போது எவ்வாறு டிஃபென்ட் செய்வது என்பதை நாம் கண்டறிய வேண்டும்.” என்று கூறி இருக்கிறார்.