நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி தன்னுடைய வழியில் பேட்டிங் செய்வதற்கு இந்திய இளம் வீரர் ஒருவர் மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறார் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு மிக முக்கிய போட்டிகளாக இருந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் விராட் கோலி மிகச் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து அணியை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” என்னைப் பொறுத்தவரையில் கேம் சேஞ்சர் ஸ்ரேயாஸ் ஐயர்தான். இதற்கு காரணம் சமீபத்திய அவருடைய பேட்டிங் ஃபார்ம். அவர் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பாக இருந்தார். மேலும் அப்பொழுது நியூசிலாந்துக்கு எதிராக அரை இறுதியில் அற்புதமாக விளையாடினார். தற்போது மீண்டும் அவர் மிகச் சிறப்பாக வந்திருக்கிறார்”
“அவர் தனக்கு ஷார்ட் பந்தில் இருந்த பிரச்சனையை சரி செய்து இருக்கிறார். கடைசி ஆட்டத்தில் அப்படியான பந்தில்தான் ஆட்டமும் இழந்தார். இருந்தாலும் அது ஒரு பிரச்சனை கிடையாது. அவருடைய முக்கியமான பலம் என்னவென்றால் தனக்கு எது பிரச்சினையாக இருக்கிறதோ அதில் சிறப்பாக முன்னேறுவதுதான்”
“விராட் கோலி தற்போது தன்னுடைய வழியில் சிறப்பாக விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மிக முக்கிய காரணமாக இருக்கிறார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் கம்பீரிடம் சுழல் பந்துவீச்சில் விராட் கோலி ஆட்டம் இழப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் 300 போட்டிகளில் விளையாடிய ஒரு வீரர் இப்படி ஆட்டம் இழப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று கூறியிருந்தார். இது சிறப்பான ஒரு பதில்.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி: ஜெயிக்கும் அணி வீரர்கள் வெள்ளை கோட் அணிவது ஏன்.?. சுவாரசிய பின்னணி காரணம்
“விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடையில் நல்ல பார்ட்னர்ஷிப் இருக்கும் பொழுது எதிரணி கேப்டனால் ஸ்பின்னர்களை வைத்து பெரிய அளவில் அழுத்தத்தை ஏற்படுத்த முடியாது. ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்பின்னர்களை நல்ல முறையில் விளையாடுகின்ற காரணத்தினால் விராட் கோலி மீது இருக்கும் அழுத்தத்தை எடுத்து விடுகிறார். இதன் காரணமாக விராட் கோலி அவருடைய வழியில் விளையாடுகிறார்” என்று கூறியிருக்கிறார்.