அஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை சேர்த்தது குறித்தும், வைபவ் சூர்யவன்ஷியை அணியில் இருந்து நீக்கியது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகம்மத் கைஃப் தனது காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன், வெறும் பத்து ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். இவர் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் சேர்க்கப்படாமல், இங்கிலாந்து தொடரிலும் பாதியிலேயே நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதால், நல்ல ஃபார்மில் இருந்த வைபவ் சூர்யவன்ஷி பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இதனால் இந்திய அணியின் ஓப்பனிங் காம்பினேஷன் குறித்து அணி நிர்வாகத்திடம் தெளிவான திட்டம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இதுகுறித்து முகம்மத் கைஃப் பேசும்போது “சஞ்சு சாம்சன் நடுவில் என்ன செய்தார் என்று அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. வழக்கமாக அணியில் இருந்து நீக்கப்படும் ஒரு பிளேயர், வேறு போட்டிகளில் விளையாடி தனது ஃபார்மை நிரூபிப்பார். ஆனால் சஞ்சு அப்படி எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
வைபவ் சூர்யவன்ஷி தொடர்ச்சியாக ரன்கள் அடித்த பிறகும் அவருக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்திய அணி நிர்வாகம் தங்களின் சிறந்த ஓப்பனிங் காம்பினேஷன் எது என்பதில் இன்னமும் குழப்பத்திலேயே இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.