ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர இளம் பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது குறித்து இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை நீக்கிவிட்டு, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், அவர் இந்த போட்டியில் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றம் அளித்துள்ளார்.
அணி நிர்வாகத்தின் இந்த முடிவு குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது “நேற்று சூர்யவன்ஷி விளையாடாததால் நாங்கள் ஒரு படம் பார்க்கத் தொடங்கிவிட்டோம். கடந்த போட்டியில் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கிய ஒருவரை எப்படி அணியில் இருந்து நீக்கலாம் என்று எனது மனைவியே என்னிடம் கோபப்பட்டு வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார். எனது மனைவியே அவரது நீக்கம் குறித்து கேள்வி எழுப்புகிறார். நீங்கள் சூர்யவன்ஷியை சரியாக நடத்தவில்லை. அடுத்த போட்டியில் அவர் விளையாடினால் கூட, ரன் அடிக்காவிட்டால் மீண்டும் தூக்கிவிடுவார்களோ என்ற பயத்துடனேயே விளையாடுவார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நீங்கள் வீரர்களின் மனதில் சந்தேகத்தை உருவாக்குவதுடன் தவறான சிக்னலையும் கொடுக்கிறீர்கள். சூர்யவன்ஷி துலீப் டிராபி, டி20, இந்தியா ஏ மற்றும் ஐபிஎல் என அனைத்து லெவலிலும் ரன் அடித்துள்ளார். நீங்கள் அவருக்கு வாய்ப்பளித்து ஊக்குவிக்க வேண்டும். சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அவரை பார்க்கவே பெரிய கூட்டமே வந்தது. அப்படிப்பட்ட ஒரு வீரரை நீங்கள் உத்வேகம் இழக்கச் செய்வது சரியல்ல” என்று கூறி இருக்கிறார்.
கடைசியாக அணி நிர்வாகத்திற்கு அறிவுரை கூறிய அவர் “இந்த அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. சூர்யவன்ஷியை நீக்காமல் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் எந்த பயமும் இல்லாமல் பெரிய அணிகளுக்கு எதிராகவும் ரன்களை குவிப்பார்” என்று கூறி இருக்கிறார்.