இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வந்தாலும் இப்போதே ரசிகர்கள் ஐபிஎல் தொடருக்கு தயாராகின்றனர். இந்த ஆண்டில் மெகா ஏலம் நடைபெற உள்ளதால், ஒவ்வொரு அணியினரும் அதிகபட்சம் நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொள்ள அனுமதி தரப்பட்டது. அதற்கேற்ப ஏற்கனவே இந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறோம் என்பதை அந்தந்த அணியினர் வெளியிட்டுவிட்டனர். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் பங்கேற்கும் என்று முன்னமே பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இணைய உள்ளன. இந்த புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பதாகவே 3 வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த இரண்டு அணிகளும் தற்போது முக்கிய வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎல் தொடர்களில் மிகவும் வலிமை வாய்ந்த அணிகளில் ஒன்றாகக் கருதப்படுவது மும்பை இந்தியன்ஸ் அணி. இதுவரை 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக அந்த அணியின் கேப்டனாக ரோகித் பொறுப்பேற்ற பிறகு மிகவும் சிறப்பாக இந்த அணி விளையாடி வருகின்றது. மெகா ஏலத்திற்கு முன்னதாக இந்த அணி கேப்டன் ரோகித், பும்ரா, சூரியகுமார், பொல்லார்ட் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. டீகாக், க்ரூணல், போல்ட், கிஷன் போன்ற பல முன்னணி வீரர்களை இந்த அணி விடுத்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கேப்டனாக உள்ள ரோகித்திற்கு அடுத்தபடியாக மற்றொரு கேப்டனை தேடும் முயற்சியில் தற்போது மும்பை அணி இறங்கியுள்ளது. இதனால் மும்பை நகரைச் சேர்ந்தவரான ஸ்ரேயாஸை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்ய கடும் முயற்சியை இந்த அணி எடுத்து வருகிறது. ஏலத்தில் நிச்சயம் இவரை எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. ரோகித்தின் கேப்டன் பொறுப்பு இன்னும் 2 அல்லது 3 ஆண்டு காலம் மட்டும் தான் அவரிடம் இருக்கும். அதனால் விரைவில் அடுத்த கேப்டனை தீர்மானிக்கும் முயற்சியில் மும்பை அணி இறங்கி ஸ்ரேயாஸை குறிவைத்துள்ளது. அதே சமயத்தில் கொல்கத்தா அணியும் ஸ்ரேயாஸை எடுத்து இப்போதே கேப்டன் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு தேவைப்படும் விஷயத்திற்கு இப்போதே ஒரு அணி வியூகம் வகுப்பதைக் கண்டு மும்பை அணியை ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.