கடைசியில் வந்து பவுண்டரி, சிக்ஸர்கள் மழை பொழிந்த நம்ம தமிழ் பையன் வாஷி… ஷ்ரேயாஸ், தவான் அரைசதம்; வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்தியா!

0
3480

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்துள்ளது. இதில் ஷ்ரேயாஸ், ஷிகர் தவான், சுப்மன் கில் ஆகியோர் அரைசதம் அடித்துள்ளனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றிய பிறகு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஜோடி மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

சுப்மன் கில்(50) மற்றும் தவான்(72) இருவரும் அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தது.

அடுத்ததாக உள்ளே வந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு முனையில் நிலைத்து ஆட, பின்னர் உள்ளே வந்த ரிஷப் பண்ட்(15) மற்றும் சூரியகுமார் யாதவ்(4) இருவரும் சொற்பரன்களுக்கு வெளியேறினர்.

ஷ்ரேயாஸ் உடன் சிறிது நேரம் பாட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 36 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 300 ரன்கள் எட்டுவதே கடினம் என இருந்தபோது, உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் தனது பணியை மிக சிறப்பாக வெளிப்படுத்தி இறக்கப்பட்ட இடத்திற்கு நியாயம் செய்தார்.

இவர் மூன்று சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகள் உட்பட 16 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 50 வது ஓவரில் 300 ரன்களை எட்டியது. கடைசியாக உள்ளே வந்த சர்துல் தாக்கூர் இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகளை இழந்த இந்திய அணி 306 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணிக்கு பந்துவீச்சில் அசத்திய லாக்கி ஃபெர்குஷன் பத்து ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 59 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொரு அனுபவ பந்துவீச்சாளர் டிம் சவுத்தி 10 ஓவர்களில் 73 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆடம் மில்னே 67 ரன்களுக்கு ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

நியூசிலாந்து அணி வெற்றிபெறுவதற்கு 307 ரன்கள் தேவைப்படுகிறது.