“இப்போதான் நிம்மதி.. பாகிஸ்தான என்ன எல்லாம் சொன்னீங்க” – சோயப் அக்தர் இந்தியாவின் தோல்விக்கு பின் கிண்டல்.!

0
6829
shoaib akhtar about india

“வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது, பாகிஸ்தான் அணிக்கு நிம்மதி பெறும் மூச்சாக இருக்கிறது.” என்கிற பாணியில் தனது கருத்தை தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர்.

நடைபெற்று வரும் ஆசியக்கோப்பையில் இந்தியா மற்றும் இலங்கை இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன. பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தபோது, துரதிஷ்டவசமாக சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை எதிர்கொண்டு நெருக்கமான போட்டியில் தோல்வியை தழுவியதால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழத்தது. இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளாகி வருகிறது பாகிஸ்தான் அணி.

- Advertisement -

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே இந்திய அணி தகுதி பெற்றுவிட்டது. இதற்கு இடையில் சம்பிரதாயபடி நடந்த சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்டு இருந்தது. அதில் வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்து 265 ரன்கள் அடித்தது. இதனை எடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் 121 ரன்கள் அடித்து ஆட்டம் போராடினார். ஆனால் கடைசி வரை நின்று போட்டியை ஃபினிஷ் செய்து கொடுக்க முடியவில்லை. ஆகையால் 259 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவியது.

இந்திய அணி பெற்ற இந்த தோல்வி ஏற்கனவே இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரால் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் சில சர்ச்சையான கருத்துக்களை பேசியுள்ளது கூடுதல் பரபரப்பை கிளப்பியுள்ளது. “எந்த போட்டியையும் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று இந்த தோல்வி உணர்த்துகிறது.” என்று முதலில் கருத்து தெரிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:

“இந்திய அணி வங்கதேச அணியை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் விளையாடியிருக்க வேண்டும். இது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்திய அணி தோல்வியை தழுவிய அதேபோல பாகிஸ்தான் அணி இலங்கையை எதிர்த்து விளையாடிய போட்டியில் தோல்வியை தழுவியது. இலங்கை போன்ற அணியை குறைத்து மதிப்பீட்டு அந்த அணிக்கு எதிராக தோல்வி அடைந்துவிட்டீர்கள் என்று கடும் விமர்சனத்தை பலரும் முன்வைத்து வருகின்றனர். இந்த விமர்சனத்தை நான் முற்றிலும் மறுக்கிறேன். ஏனெனில் இலங்கை அணியை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் சர்வதேச தரம்மிக்க அணி என்று பலமுறை ஆசியக்கோப்பையை வென்றதிலிருந்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

- Advertisement -

அதேநேரம் இந்திய அணியும் வங்கதேசம் அணியிடம் தோல்வியை தழுவி இருக்கிறது. வங்கதேச அணியும் எதற்கும் குறைந்த அணி அல்ல என்பது இந்த தோல்வி உணர்த்துகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அணி சிறிய அணி என்று கிடையாது. அந்த நேரத்தில் அந்த போட்டியில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் அவர்களுக்கு வெற்றி. இந்திய அணி பெற்ற இந்த தோல்வி பாகிஸ்தான் அணிக்கு நிம்மதி பெருமூச்சு கொடுத்திருக்கிறது. ஏனெனில் பல விமர்சனங்களை இந்த தோல்வி பொய்யாக்கி இருக்கிறது.” என்று வித்தியாசமான கருத்தை கூறி இருக்கிறார் அக்தர்.