உலக சாதனையைச் சமன் செய்து தொடரை வென்றது ஷிகர் தவானின் இந்திய அணி!

0
844
ICT

தென்ஆப்பிரிக்கா அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. தற்பொழுது ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது!

இந்த தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருந்தது. இன்று தொடர் யாருக்கென்று தீர்மானிக்கப்படும் தொடரின் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. கேசவ் மகாராஜ், ரபாடா, பர்னல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பார்ச்சூன், பெலுவாக்கியா, யான்சன் ஆகியோருக்கு வாய்ப்பு புறப்பட்டது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். குயின்டன் டி காக் வாஷிங்டன் சுந்தர் வலையில் விழுந்தார். இதற்கடுத்து ஜே மலான் மற்றும் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் இருவரையும் முகமது சிராஜ் வீழ்த்தினார்.

இந்திய இளம் வீரர் ஷாபாஸ் அகமத் லெய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்றி கிளாசன் இருவரையும் பெவிலியன் அனுப்பினார். தென் ஆப்பிரிக்க அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன் டேவிட் மில்லரை இரண்டாவது ஸ்பெல் வீசவந்த வாசிங்டன் சுந்தர் கிளீன் போல்ட் செய்தார். இதற்கடுத்து கடைசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் அசத்தினார். இதனால் 99 ரன்களுக்கு தென்ஆப்பிரிக்க அணி சுருண்டு, இந்திய அணிக்கு எதிராக குறைந்த ரன்னை ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவு செய்தது.

இதற்கு அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் மற்றும் இஷன் கிஷன் சீக்கிரத்தில் வெளியேறினார்கள். இந்த போட்டியில் சுப்மன் கில் தனது பழைய அழகான பேட்டிங்கை கொண்டுவந்தார். அவர் 57 பந்துகளில் 49 ரன்கள் 8 பவுண்டரிகளுடன் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்து வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ஸ்ரேயாஸ் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

- Advertisement -

இந்த வெற்றி இந்திய அணிக்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்த ஆண்டில் 38வது வெற்றியாகும், இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 2003ஆம் ஆண்டு ஒரு ஆண்டில் 38 வெற்றிகளை பதிவு செய்து உலக சாதனை செய்திருந்தது. தற்போது இந்திய அணி அந்த உலக சாதனையை சமன் செய்து இருக்கிறது. மேலும் 2017ஆம் ஆண்டு இந்திய அணி மொத்தம் 37 வெற்றிகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.