“கடைசி நேரத்தில் என்கிட்ட இருந்து கேப்டன்ஷிப்பை பறித்து கேஎல் ராகுல் கிட்ட கொடுத்தது, எனக்கு…” – ஷிகர் தவான் மனம்திறந்து பேட்டி!

0
740

ஜிம்பாப்வே தொடரின் போது, தன்னிடமிருந்து கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு கடைசி நேரத்தில் கே.எல். ராகுல் இடம் கொடுக்கப்பட்டது குறித்து பேட்டி அளித்திருக்கிறார் தவான்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை முடித்துவிட்டு தற்போது ஒரு நாள் தொடருக்கு தயாராகி வருகிறது. முதல் போட்டி 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டி20 தொடரை இழந்த நியூஸிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடம் பிடித்திருக்கிறது. இதனை தக்கவைப்பதற்கு தொடரை கைப்பற்றுவது மிகவும் அவசியமாகும்.

ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ஷிகர் தவான், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, ஆசியகோப்பை தொடருக்கும் முன்பு ஜிம்பாப்வே சென்று ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடியது. அந்த தொடருக்கு முதலில் ஷிகர் தவான் கேப்டன் பொறுப்பேற்று விளையாடுவதாக இருந்தார். கடைசி நேரத்தில் கேஎல் ராகுலுக்கு அந்த கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதற்கு உங்களது பதில் என்ன? என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டார்.

இதற்கு பதில் அளித்த ஷிகர் தவான் கூறுகையில், “எனக்கு அவ்வளவு பெரிய வலியை அது தரவில்லை. எது நமக்கு நடக்கிறதோ அதை நமக்கு நல்லதாகவே அமையும் என்று எடுத்துக் கொள்பவன் நான். தென் ஆப்பிரிக்கா தொடரின் போது எனக்கு கேப்டன் பொறுப்பு கிடைத்தது. அப்போதும் இதேபோன்றுதான் நான் உணர்ந்தேன். கேப்டன் அல்லது கேப்டன் இல்லை இரண்டிற்கும் ஒரே மாதிரியாகத்தான் நான் இருப்பேன்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “கேஎல் ராகுல் துணை கேப்டனாக இருந்து வருகிறார். அவர் அணிக்குள் வந்தால் நிச்சயம் அவருக்குத்தான் கேப்டன் பொறுப்பு கொடுக்க வேண்டும். அப்போது அவர் ஆசிய கோப்பைக்கும் செல்வதாக இருந்தார்.

ஆசியகோப்பையில் துரதிஷ்டவசமாக, ரோஹித் சர்மா காயம் ஏற்பட்டு வெளியேறினால் அப்போது கேஎல் ராகுல் கேப்டனாக இருக்க வேண்டும். அந்த சமயத்தில் அவர் ஜிம்பாப்வே தொடரை முன்அனுபவமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் எந்த தவறும் இல்லை. நான் இதற்காக வருத்தப்படவில்லை.” என்றார்.