நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றிக்கு 5 விக்கட்டுகள் வீழ்த்தி லக்னோ அணிக்கு பெரிய ஆதரவாக இருந்த சர்துல் தாக்கூர் லக்னோ அணியில் இணைந்த விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
லக்னோ அணி வெற்றி
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சர்துல் தாகூரை எந்த அணியும் வாங்கவில்லை. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோஷின் கான் காயம் காரணமாக விலக, அவருக்கு பதில் மாற்று வீரராக சர்துல் தாக்கூர் லக்னோ அணிக்கு அழைக்கப்பட்டார். டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும் இரண்டு ஓவர்கள் மட்டும் வீசி 2 விக்கெட்டுகள் கைப்பற்றி தாகூர் தனது கவனத்தை ஈர்த்தார்.
இந்த சூழ்நிலையில் பலமான சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக முதல் ஸ்பெல் வீசிய தாகூர் தனது இரண்டாவது ஓவரில் அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை கைப்பற்றி சன்ரைசர்ஸ் அணியின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார். பின்னர் அதே ஓவரின் அடுத்த பந்தில் இஷான் கிஷான் விக்கட்டையும் வீழ்த்தி ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்குப் பின்னர் 2 விக்கெட் கைப்பற்றி மொத்தமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் தாகூர் லக்னோ அணியில் இணைந்த விதம் குறித்த சில முக்கிய கருத்துக்களை பேசி இருக்கிறார்.
ஜாகிர்கான் போன் செய்தார்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் ஏலத்தில் எடுக்கப்படாத போது நான் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. இருப்பினும் எனது திட்டங்களை சரியாக தீட்டிவிட்டு ஐபிஎல் தொடரில் விளையாட விட்டாலும் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தேன். நான் ரஞ்சி டிராபியில் விளையாடும் போது ஜாகிர் கான் எனக்கு போன் செய்து உங்களை மாற்று வீரராக அழைக்கலாம். எனவே எதற்கும் தயாராக இருங்கள் என்று கூறினார். நீங்கள் மாற்றுவீராக அழைக்கப்பட்டால் போட்டியின் தொடக்க ஓவர்களை வீசவும் வாய்ப்புள்ளது என்று கூறினார். ஏற்றத்தாழ்வுகள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி.
இதையும் படிங்க:எங்கள் வெற்றிக்கு அடித்தளம் ஜாகிர்கான்தான்.. அவர் சொன்ன இந்த விஷயத்தை செய்தேன் – ரிஷப் பண்ட் பேட்டி
நான் எப்போதும் எனது திறமைகளை ஆதரித்து வருகிறேன். அபிஷேக்சரமா மற்றும் ஹெட் வாய்ப்புகளை பயன்படுத்துவார்கள் என்று தெரியும். எனவே நான் அவர்களுக்கு எதிராக என் வாய்ப்புகளை பயன்படுத்த முடிவு செய்தேன். புதிய பந்தில் வீசும் போது ஸ்விங் செய்தால் விக்கெட்டுகளை எடுப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே இன்றைய ஆட்டத்தில் நான் அதைத்தான் செயல்படுத்தினேன்” என்று கூறி இருக்கிறார்.






