“லார்ட் சர்துல் தாக்கூர் புதிய சாதனை”… டான் பிராட்மேனுக்கு நிகரான ரெக்கார்ட்!

0
937

இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் அரைசதமடித்த சர்துல் தாக்கூர், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில், இந்திய அணி 151 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து 318 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு பரத் முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த தாகூர் மற்றும் ரகானே இருவரும் ஏழாவது விக்கெட்டிற்கு 109 சேர்த்தனர். ரகானே 89 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு கடைசி வரை நின்று போராடிய தாக்கூர் 51 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். ஓவல் மைதானத்தில் தாக்கூர் அடிக்கும் தொடர்ச்சியான மூன்றாவது அரைசதம் இதுவாகும்.

2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இருந்தபோது இவர் முதல் இன்னிங்சில் 60 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் 57 ரன்கள் என தொடர்ச்சியாக இரண்டு அரைசதங்கள் அடித்திருந்தார். அப்போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. நடைபெற்று வரும் பைனலில் அரைசதம் அடித்ததன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக அரைசதம் அடித்து, ஓவல் மைதானத்தில் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்திருக்கிறார்

- Advertisement -

இதற்கு முன்னர் ஜாம்பவான் டான் பிராட்மேன் ஓவல் மைதானத்தில் தொடர்ச்சியாக 3 முறை 50+ ரன்கள் அடித்திருக்கிறார். அதன்பின் எவரும் இதை செய்ததில்லை. தற்போது இதனை சமன் செய்துள்ளார் இந்திய வீரர் சர்துல் தாக்கூர்.

நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியை விட 172 ரன்கள் பின்தங்கிய நிலையிலும் இருக்கிறது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்களை கடந்து கிட்டத்தட்ட 275 பிளஸ் ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.