விராட் கோலி குறித்த ரிக்கி பாண்டிங் கருத்துக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிரட் லீயின் அண்ணன் ஷேன் லீ விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது ரிக்கி பாண்டிங் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கிறார். இப்படியான நிலையில் ஆஸ்திரேலியா செல்லும் விராட் கோலி குறித்து ரிக்கி பாண்டிங் தெரிவித்த விமர்சனம் பெரிய அளவில் சர்ச்சுக்குரியதாக மாறி வருகிறது.
விராட் கோலிக்கு இடமே இருக்காது
விராட் கோலி பற்றி பேசியிருந்த ரிக்கி பாண்டிங் கூறியிருந்த பொழுது ” விராட் கோலி கடந்த சில வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு மூன்று சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இதுவே வேறு ஒரு அணியாக இருந்திருந்தால் விராட் கோலியை நீக்கி இருப்பார்கள்” என்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.
இதுகுறித்து பதில் அளித்து இருந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் “இந்திய கிரிக்கெட்டுக்கும் ரிக்கி பாண்டிங்க்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவர் முதலில் தன்னுடைய ஆஸ்திரேலியா கிரிக்கெட்டைப் பற்றி பேசட்டும். எங்கள் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கடுமையாக உழைத்து தயாராகி இருக்கிறார்கள். அவர்கள் சாதித்தவர்கள் மேலும் சாதிப்பார்கள்” என்று பதிலடி கொடுத்திருந்தார்.
ரிக்கி பாண்டிங் கம்பீருக்கு பதிலடி
இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் கம்பீரை முட்கள் நிறைந்த மனிதர் என்றும், தான் விராட் கோலி குறித்து அப்படியான கருத்தை கூறியிருந்தாலும் கூட, அதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் விராட் கோலி சாதித்திருக்கிறார், எனவே இந்த முறையும் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி சிறப்பான முறையில் விளையாடுவார் என்று தான் கூறியிருந்தேன் என்று விளக்கம் அளித்து பதிலடி கொடுத்தார்.
இருந்தபோதிலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரட் லீயின் அண்ணன் ஷேன் லீ “அந்த கருத்து ஒரு மோசமான நடவடிக்கை. ரிக்கி நீங்கள் என்ன செய்கிறீர்கள்? விராட் கோலி போன்ற ஒரு வீரரை அணியை விட்டு நீக்க போகிறீர்களா? விராட் கோலி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுவார்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட்.. இந்திய அணிக்கு மீண்டும் பயிற்சி போட்டி.. ஆனால் பிசிசிஐ கடும் கட்டுப்பாடு.. காரணம் என்ன? – வெளியான தகவல்கள்
ஆஸ்திரேலியாவில் சென்று விளையாடுவது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானது கிடையாது ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரானது என்கின்ற கருத்தை தற்போது ஆஸ்திரேலிய மீடியாக்கள் மற்றும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் நிரூபித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






